ஆறாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

உலகத்துக்கு வந்துசேரவேண்டும்
ஆறாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

பாடல் - 1

நீராய், நிலனாய்த் தீயாய்க் காலாய், நெடுவானாய்,
சீர்ஆர் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய், அயன்ஆனாய்,
கூர்ஆர் ஆழி, வெண்சங்கு ஏந்திக் கொடியேன்பால்
வாராய் ஒருநாள், மண்ணும் விண்ணும் மகிழவே.

எம்பெருமானே, நீ நீர், நிலம், நெருப்பு, காற்று, நீண்ட வான் என்கிற ஐம்பூதங்களாகவும் ஆனாய், சிறப்பு நிறைந்த சூரியன், சந்திரன் என்கிற சுடர்கள் இரண்டுமாக ஆனாய், சிவனானாய், பிரம்மனானாய், இந்த மண்ணும் விண்ணும் மகிழும்படி, கூர்மையான சக்கரத்தையும், வெண்மையான சங்கையும் ஏந்திக்கொண்டு, கொடியேனாகிய என்னிடம் நீ ஒருநாள் வரவேண்டும்.

***

பாடல் - 2

மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலம் காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே,
நண்ணி உனை நான் கண்டு உகந்து கூத்தாட
நண்ணி ஒருநாள் ஞாலத்து ஊடே நடவாயே.

மண்ணும் விண்ணும் மகிழும்படி வாமனனாக வந்து, உன்னுடைய வலிமையைக் காட்டி, இந்த மண்ணையும் விண்ணையும் அளந்துகொண்டவனே, மாயங்களைச் செய்யும் அம்மானே, நான் உன்னை அடைந்து, கண்டு, மகிழ்ந்து, கூத்தாடவேண்டும், அதற்காக, நீ ஒருநாள் இந்த உலகத்துக்கு வந்துசேரவேண்டும், இந்தப் பூமியினூடே நடந்துவரவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com