ஆறாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

பாற்கடலில் கிடந்த
ஆறாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

பாடல் - 5

விண்மீது இருப்பாய், மலைமேல் நிற்பாய்,
                                                கடல் சேர்ப்பாய்,
மண்மீது உழல்வாய், இவற்றுள் எங்கும்
                                                மறைந்து உறைவாய்,
எண்மீது இயன்ற புற அண்டத்தாய், எனது ஆவி
உள்மீது ஆடி உருக்காட்டாதே ஒளிப்பாயோ.

பரமபதத்தில் வீற்றிருப்பவனே, திருமலையில் நிற்பவனே, பாற்கடலில் கிடந்த திருக்கோலத்தில் அருள்புரிபவனே, பூமியிலே பல அவதாரங்களைச் செய்தவனே, இப்பொருள்கள் அனைத்திலும் மறைந்து உறைபவனே, எண்ண இயலாத புற அண்டங்களிலும் இருப்பவனே, என் ஆவிக்குள் நடமாடுகிறவனே, உன்னுடைய திருவுருவத்தை எனக்குக் காட்டாமல் ஒளிக்கலாமா!

***

பாடல் - 6

பாய் ஓர் அடிவைத்து அதன்கீழ்ப் பரவை
                                                      நிலம் எல்லாம்
தாய் ஓர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன், உன்னைக் காண்பான் வருந்தி
                                                     எனைநாளும்
தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில்
                                                    திரிவேனோ?

திருவடிகளால் உலகை அளந்த மாயோனே, ஓர் அடியைப் பரப்பிவைத்து, கடலால் சூழப்பட்ட உலகையெல்லாம் அதன்கீழே அளந்தவனே, இன்னொரு திருவடியைத் தாவி மேலே வைத்து, மற்ற உலகங்கள் அனைத்தையும் அளந்துகொண்டவனே/ஆக்கிரமித்தவனே, உன்னைக் காண விரும்பி வருந்துகிறேன், தீயிலே சேர்ந்த மெழுகைப்போல் உருகுகிறேன், இன்னும் எத்தனை நாள் நான் இப்படி உன்னைத்தேடி இந்த உலகில் திரிவேனோ!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com