ஆறாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

அழிக்க எண்ணுகிறாயோ?
ஆறாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

பாடல் - 9

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ,
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே
கூவிக்கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ?

எம்பெருமானே, மனம் கலங்கும்படி ஐந்து இந்திரியங்களும் என்னை வருத்துகின்றன, இப்படிப் பலவகையான சிற்றின்பங்களைக் காட்டி நீ என்னை அழிக்க எண்ணுகிறாயோ? (இந்தச் சிற்றின்பங்கள் எனக்கு வேண்டாம்.) தாவி உலகை அளந்த உன்னுடைய பெரிய தாமரைத் திருவடிகளுக்கே என்னைக் கூவிக்கொள், அந்தக் காலம் விரைவில் வராதா!

***

பாடல் - 10

குறுகா, நீளா, இறுதிகூடா எனை ஊழி
சிறுகா, பெருகா, அளவுஇல் இன்பம் சேர்ந்தாலும்
மறுகால் இன்றி மாயோன், உனக்கே ஆள்ஆகும்
சிறுகாலத்தை உறுமோ, அந்தோ, தெரியிலே.

எம்பெருமானே, குறையாமல், நீளாமல், முடிவில்லாமல் தொடரும் பல ஊழிக்காலங்களுக்கு அளவில் குறையாத, பெருகாத, அளவில்லாத இன்பம் எனக்குக் கிடைத்தாலும், நான் அதை விரும்பமாட்டேன், மாயோனே, ஒரே ஒருமுறை உன்னுடைய அடியவனாகி உனக்குக் கைங்கர்யங்களைச் செய்யவேண்டும், அந்தப் பாக்கியம் எனக்குச் சிறிதுநேரம் கிடைத்தாலும் போதும். யோசித்துப்பார்த்தால், உனக்குச் சேவை செய்யும் இன்பத்துக்கு வேறெந்த இன்பம் ஈடாகும்? அந்தோ, மற்ற இன்பங்கள் பரிதாபமானவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com