ஆறாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

நீங்கியிருக்க இயலாது
ஆறாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

பாடல் - 9

வந்தாய்போலே வாராதாய், வாராதாய்போல்
                                                         வருவானே,
செந்தாமரைக் கண், செங்கனி வாய், நால் தோள்
                                                         அமுதே, எனது உயிரே,
சிந்தாமணிகள் பகர் அல்லைப் பகல்செய்
                                                        திருவேங்கடத்தானே,
அந்தோ, அடியேன் உன பாதம் அகலகில்லேன்
                                                       இறையுமே.

வருவதைப்போல் வராதிருப்பவனே, வராமலிருப்பதைப்போல் வந்துவிடுபவனே, செந்தாமரைபோன்ற திருக்கண்கள், செங்கனிபோன்ற திருவாய், நான்கு திருத்தோள்களையுடைய அமுதே, எனது உயிரே, சிந்தாமணிகளின் ஒளி இருட்டைப் பகலாக்குகின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருப்பவனே, எம்பெருமானே, அந்தோ, உன்னுடைய திருவடிகளைச் சிறுபொழுதும் என்னால் நீங்கியிருக்க இயலாது!

***

பாடல் - 10

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை
                                                                உறை மார்பா,
நிகர்இல் புகழாய், உலகம் மூன்றுஉடையாய்,
                                                               என்னை ஆள்வானே,
நிகர்இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்
                                                               திருவேங்கடத்தானே,
புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து
                                                               புகுந்தேனே.

எம்பெருமானே, ‘உன்னைவிட்டுச் சிறிதும் பிரியமாட்டேன்’ என்று அலர்மேல்மங்கை நிரந்தரமாக உறைகின்ற திருமார்பைக்கொண்டவனே, நிகரற்ற புகழைக்கொண்டவனே, மூன்று உலகங்களையும் தனக்கு உரிமையாகக் கொண்டவனே, என்னை ஆள்பவனே, நிகரில்லாத தேவர்கள், முனிவர் கூட்டங்கள் விரும்புகின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருப்பவனே, வேறு புகலிடம் இல்லாத நான் உன்னுடைய திருவடியின்கீழ் பொருந்திப் புகுந்தேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com