ஏழாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 1, 2

பெருமாயங்களைச் செய்தவனே
ஏழாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 1, 2

பாடல் - 1

உள் நிலாவிய ஐவரால் குமை தீற்றி என்னை
                                                       உன் பாத பங்கயம்
நண்ணிலாவகையே நலிவான் இன்னம்
                                                      எண்ணுகின்றாய்,
எண்ணிலாப் பெரு மாயனே, இமையோர்கள்
                                                      ஏத்தும் உலகம் மூன்று உடை
அண்ணலே, அமுதே, அப்பனே, என்னை ஆள்வானே.

எம்பெருமானே, எண்ணமுடியாத பெருமாயங்களைச் செய்தவனே, தேவர்கள் போற்றுகின்ற பெருமானே, மூன்று உலகங்களையும் தனக்கு உரிமையாகக் கொண்ட அண்ணலே, அமுதே, அப்பனே, என்னை ஆள்பவனே, எனக்குள் வசிக்கிற ஐந்து இந்திரியங்களால் என்னைத் துன்பப்படுத்துகிறாய், உன்னுடைய
தாமரைத் திருவடிகளைச் சேரமுடியாதபடி இன்னும் என்னை நலியச்செய்ய எண்ணுகிறாயே.

***

பாடல் - 2

என்னை ஆளும் வல் கோ ஓர் ஐந்து இவை
                                   பெய்து இராப்பகல் மோதுவித்திட்டு
உன்னை நான் அணுகாவகை செய்து போதி 
                                   கண்டாய்,
கன்னலே, அமுதே, கார்முகில் வண்ணனே,
                                  கடல் ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய், வினையேனுடை வேதியனே.

கரும்பே, அமுதே, கருமேக வண்ணனே, கடலால் சூழப்பட்ட உலகைக் காக்கின்ற மின்னும் சக்கரத்தைக் கொண்டவனே, வினையேனாகிய என்னுடைய வேதியனே, ஐந்து வலுவான இந்திரியங்கள் என்னை ஆளுகின்றன, இவற்றை என் உடலில் வைத்தது நீதானே, இரவுபகலாக இவற்றால் என்னைத் தாக்குவதும் நீதானே, அதன்மூலம், உன்னை நான் அணுகாதபடி செய்துவிட்டுச் செல்கிறவனும் நீதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com