ஏழாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 3, 4

உலகை அளந்தவனே
ஏழாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 3, 4

பாடல் - 3

வேதியாநிற்கும் ஐவரால் வினையேனை
                                       மோதுவித்து உன் திருவடிச்
சாதியாவகை நீ தடுத்து என் பெறுதி? அந்தோ,
ஆதி ஆகி, அகல் இடம் படைத்து, உண்டு,
                                      உமிழ்ந்து, கடந்து, இடந்திட்ட
சோதி நீள்முடியாய், தொண்டனேன், மதுசூதனனே.

அனைத்துக்கும் ஆதியானவனே, அகன்ற இந்த உலகத்தைப் படைத்தவனே, பிரளயத்தின்போது அதனை உண்டு காத்தவனே, பின்னர் உமிழ்ந்தவனே, வாமனனாக அவதாரமெடுத்து உலகை அளந்தவனே, வராகமாக அவதாரமெடுத்து உலகை இடந்தெடுத்தவனே, சோதிவடிவான நீண்ட திருமுடியைக் கொண்டவனே, தொண்டனாகிய என்னுடைய துயரங்களை/எதிரிகளை அழிக்கும் மதுசூதனனே, ஐந்து இந்திரியங்களும் என்னை வேதனைப்படுத்துகின்றன, இவ்வாறு என்னைச் சிரமப்படச்செய்து, உன்னுடைய திருவடிகளை நான் வந்துசேராதபடி தடுக்கிறாயே, இதனால் உனக்கு என்ன பலனோ, அடடா!

***

பாடல் - 4

சூது நான் அறியாவகை சுழற்றி ஓர்
                                 ஐவரைக் காட்டி உன் அடிப்
போது நான் அணுகாவகை செய்து
                                போதி கண்டாய்
யாதும் யாவரும் இன்று நின் அகம்பால்
                                ஒடுக்கி ஓர் ஆலின் நீள் இலை
மீதுசேர் குழவி, வினையேன் வினைதீர் மருந்தே.

அனைத்துப் பொருள்களையும் அனைத்து உயிர்களையும் மனிதர்களையும் உன்னுடைய வயிற்றிலே வைத்து, ஆலமரத்தின் நீண்ட இலையொன்றில் குழந்தையைப்போல் பள்ளிகொள்ளும் பெருமானே, வினைபுரிந்தவனான என்னுடைய வினைகளைத் தீர்க்கும் மருந்தே, எனக்குள்ளே ஐந்து இந்திரியங்களை வைத்தாய், அவை செய்கிற சூதினை நான் அறியாதபடி
சுழற்றினாய், உன்னுடைய திருவடி மலர்களை நான் அணுகாதபடி செய்துவிட்டுச் செல்கிறாயே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com