ஏழாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 5, 6

நெகிழவிடுபவன் நீயல்லவா?
ஏழாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 5, 6

பாடல் - 5

தீர்மருந்து இன்றி ஐவர் நோய் அடும் செக்கில்
                                                   இட்டுத் திரிக்கும் ஐவரை
நேர், மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான்
                                                   ஒக்கின்றாய்,
ஆர் மருந்து இனி ஆகுவார்! அடல் ஆழி ஏந்தி
                                                  அசுரர் வன்குலம்
வேர் மருங்கு அறுத்தாய், விண்ணுளார்
                                                  பெருமானேயோ.

கொல்லுகின்ற சக்ராயுதத்தை ஏந்தி, அசுரர்களின் வலிமையான குலத்தை வேரோடு அறுத்தவனே, விண்ணோர் பெருமானே, ஐந்து புலன்கள் என்கின்ற நோயைத் தீர்க்க மருந்தேதும் இல்லை, அந்த நோயால் துன்புறுத்தப்படுகிற உடலாகிய செக்கிலே என்னை இட்டு ஐந்து இந்திரியங்களும் நேராகவும் பக்கங்களிலும் ஆட்டுகின்றன, இந்நிலையில் என்னை நிறுத்தி நெகிழவிடுபவன் நீயல்லவா? என் துயரத்துக்கு வேறு யார் மருந்து? (வேறு யாருமில்லை. நீயே மருந்து.)

***

பாடல் - 6

விண்ணுளார் பெருமாற்கு அடிமைசெய்வாரையும்
                                                  செறும் ஐம்புலன் இவை,
மண்ணுள் என்னைப்பெற்றால் என்செய்யா மற்று
                                                   நீயும் விட்டால்,
பண் உளாய், கவிதன் உளாய், பத்தியின் உள்ளாய்,
                                                  பரமீசனே, வந்து என்
கண் உளாய், நெஞ்சு உளாய், சொல் உளாய், ஒன்று
                                                 சொல்லாயே.

பண்ணில் இருப்பவனே, கவியில் இருப்பவனே, பக்தியில் இருப்பவனே, மேலான ஈசனே, என் கண்ணில் இருப்பவனே, நெஞ்சில் இருப்பவனே, சொல்லில் இருப்பவனே, விண்ணோர் பெருமானான உனக்கு அடிமைசெய்பவரைக்கூட இந்த ஐம்புலன்கள் வருத்துகின்றன, அப்படியானால், என்னைப்போன்ற ஒருவனை இந்த ஐம்புலன்களும் என்னவெல்லாம் செய்யும்! இந்நிலையில் நீயும் என்னைக் கைவிட்டால் என் நிலைமை என்ன ஆகும், எனக்காக வந்து ஒரு சொல்
சொல்லமாட்டாயா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com