நான்காம் பத்து நான்காம் திருவாய்மொழி பாடல் - 7,8

பித்தேறிய நிலையில்
நான்காம் பத்து நான்காம் திருவாய்மொழி பாடல் - 7,8

பாடல் - 7

ஏறிய பித்தினோடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும்,
நீறு செவ்வே இடக்காணில் நெடுமால் அடியார் என்று ஓடும்,
நாறு துழாய்மலர் காணில், நாரணன் கண்ணி ஈது என்னும்,
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத்திருவே.

(தாய் சொல்கிறார்)

பித்தேறிய நிலையில், ‘எல்லா உலகங்களும் கண்ணனுடைய படைப்பு’ என்கிறாள் என் மகள், திருநீறு நேரே இட்டுள்ள அடியவர்களைக் கண்டால், ‘நெடுமாலின் அடியவர்கள் வந்துவிட்டார்கள்’ என்று ஓடுகிறாள், மணம்வீசுகிற துளசிமலரைக்கண்டால், ‘நாரணனின் மாலை இது’ என்கிறாள், தெளிந்த நிலையிலும், தெளியாத நிலையிலும் இவள் மாயோனாகிய எம்பெருமானைப்பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறாளே!

******

பாடல் - 8

திருஉடை மன்னரைக் காணில், திருமாலைக் கண்டேனே என்னும்,
உருஉடை வண்ணங்கள் காணில், உலகு அளந்தான் என்று துள்ளும்,
கருஉடைத் தேவில்கள் எல்லாம், கடல்வண்ணன் கோயிலே என்னும்,
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.

(தாய் சொல்கிறார்)

செல்வம் நிறைந்த மன்னர்களைக் கண்டால், ‘திருமாலைக் கண்டேனே’ என்கிறாள் என் மகள், அழகிய வடிவங்களைக் கண்டால், ‘உலகளந்தவன் வந்துவிட்டான்’ என்று துள்ளுகிறாள், இறைவன் படிமங்களைக்கொண்ட கோயில்களைக் கண்டால், ‘கடல்வண்ணனின் கோயில் இது’ என்கிறாள், (தன்னைக் குறைசொல்லுகிற பிறரைக்கண்டு) அஞ்சும்போதும், மயங்கி விழும்போதுகூட இவள் கண்ணனின் திருவடிகளைதான் விரும்புகிறாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com