நான்காம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி பாடல் - 1,2

ஏழு உலகங்களிலும்
நான்காம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி பாடல் - 1,2

பாடல் - 1

வீற்றுஇருந்து ஏழு உலகும் தனிக்கோல் செல்ல வீவுஇல்
                                                                                              சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை, வெம்மா பிளந்தான்
                                                                                             தன்னை
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது சொல்மாலைகள்
ஏற்ற நோற்றோற்கு இனி என் குறை எழுமையுமே?

(பரமபதத்தில்) கம்பீரமாக வீற்றிருந்து, ஏழு உலகங்களிலும் தன்னுடைய ஒப்பற்ற செங்கோல் செல்லும்படி ஆள்கிறவன், குறையாத சிறப்பு, மிகுந்த ஆற்றலுடன் ஆட்சிசெய்கிற அம்மான், கேசி என்கிற கொடிய அரக்கன் குதிரை வடிவில் வந்தபோது அவனுடைய வாயைப் பிளந்தவன், எம்பெருமான், அத்தகைய பெருமானைப் ‘போற்றி’ என்று சொல்லி, கைகளை குவித்து ஆசைதீரத் தொழுது, சொற்களால் ஆன மாலைகளை அவனுக்குச் சூட்டுகிறேன், இத்தகைய அரிய புண்ணியம் எனக்குக் கிடைத்துள்ளது, இனி எனக்கு ஏழு பிறவிகளிலும் (எத்தனை பிறவிகள் எடுத்தாலும்) என்ன குறை? (ஏதும் குறையில்லை.)

******

பாடல் - 2

மைய கண்ணாள், மலர்மேல் உறைவாள் உறை
                                                                                 மார்பினன்,
செய்ய கோலத் தடம்கண் விண்ணோர் பெருமான்தனை
மொய்ய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி
                                                                                  உள்ளப்பெற்றேன்,
வெய்ய நோய்கள்முழுதும் வியன் ஞாலத்து வீயவே.

மையணிந்த கண்களைக் கொண்டவள், தாமரை மலரிலே அமர்கிறவள், திருமகள், அந்தத் திருமகள் வாழும் மார்பைக் கொண்ட பெருமான், சிவந்த, அழகிய, பெரிய கண்களைக் கொண்டவன், விண்ணோர் பெருமான், அத்தகைய பெருமானை நான் நிறைந்த சொற்களால் இசையோடு போற்றுகிறேன், அதனால், இந்த அகன்ற உலகத்தில் இருக்கும் கொடிய நோய்கள் அனைத்தும் வீழ்ந்துபோயின, அவனை எண்ணி எண்ணி அனுபவிக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com