நான்காம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 7,8

என்ன குறை?
நான்காம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 7,8

பாடல் - 7

என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன்தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான்தனை
குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச் சொல்மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம், என்ன குறை நமக்கே?

என்றும் தனித்துவமாகத் திகழ்கிறவன், தனக்கு இணையாகவோ, தன்னைவிடச் சிறந்தவர்களாகவோ யாரும் இல்லாதவன், ஒப்பற்றவன், எல்லா உலகங்களையும் ஆட்சிசெய்பவன், கோவர்த்தன மலையைத் தாங்கி நின்று அதனால் ஆயர்களை, பசுக்களை மழையிலிருந்து காத்தவன், அத்தகைய பெருமானுக்குச் சொல்மாலைகளைச் சூட்டிப் போற்றும் அருள் நமக்குக் கிடைத்தது, இனி நமக்கு என்ன குறை? (ஏதுமில்லை.)

******

பாடல் - 8

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை, ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை, தண்தாமரை
சுமக்கும் பாதப் பெருமானை சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே?

நமக்கும், தாமரைப்பூவிலே வீற்றிருக்கும் திருமகளுக்கும் இனியவன், உலகத்தவர் அனைவருக்கும், வானத்திலுள்ள தேவர்களுக்கும் தலைவன், அவனுடைய திருவடிகளைக் குளிர்ந்த தாமரைகள் தாங்கிநிற்கும், அத்தகைய பெருமானைச் சொல்மாலைகளால் போற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது, அகன்ற வானத்திலே இனி எனக்கு யார் நிகர்? (யாருமில்லை.)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com