நான்காம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 9,10

எவரேனும் உண்டா?
நான்காம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 9,10

பாடல் - 9

வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும்
                                                                        மண்ணின்கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான்தனை,
கூன், நல் சங்கத் தடக்கையவனை, குடம் ஆடியை,
வானக்கோனை கவிசொல்ல வல்லேற்கு இனி மாறு
                                                                        உண்டோ?

வானத்திலும், வானத்தினுள்ளே இருக்கிற தேவலோகத்திலும், மண்ணிலும், மண்ணின் கீழே இருக்கிற பாதாள உலகத்திலும் எட்டுத் திசைகளிலும் பரந்து நிற்கிறவன், வளைந்த, நல்ல சங்கினைக் கையில் கொண்டவன், குடக்கூத்து ஆடிய கண்ணன், வானுலகின் தலைவன், அத்தகைய பெருமானைக் கவிதையில் பாடவல்லவன் நான், எனக்கு இனி ஒப்பாக எவரேனும் உண்டா? (இல்லை.)

******

பாடல் - 10

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்று இருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான்தன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன், அடியார்க்கு இன்ப மாரியே.

எம்பெருமான் பிரளயத்தின்போது உலகை உண்டு, பின்னர் உமிழ்ந்தான், திரிவிக்ரமனாக அவதாரமெடுத்து உலகை அளந்தான், வராக அவதாரமெடுத்து உலகை இடந்தெடுத்தான், ராமாவதாரத்தின்போது கடற்கரையில் கிடந்தான், பின்னர் போரில் வென்று அனைவருக்கும் திருக்காட்சி தந்து நின்றான், அயோத்தியின் அரசனாகத் திருமுடி சூடி வீற்றிருந்தான், பூமாதேவியை மணந்து ஆட்சிபுரிந்தான், இப்படிப் பலவிதங்களில் இந்த உலகே தன்னுடையதுதான் என்று சொல்லும்படி நின்றான் அப்பெருமான், அவனைப் போற்றும் வளமான தமிழ்ப்பாடல்களைத் தொடுக்கும் புண்ணியம் எனக்குக் கிடைத்தது, இந்தப் பாடல்கள் அடியவர்களுக்கு இன்ப மழையாகத் திகழ்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com