மூன்றாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

நற்குணங்கள் நிரம்பியவன்

கொள்ளும் பயன் இல்லை; குப்பை கிளர்த்துஅன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து, நும்வாய்மை இழக்கும் புலவீர்காள்!
கொள்ளக் குறைவுஇலன், வேண்டிற்று எல்லாம் தரும்
                      கோதுஇல்என்
வள்ளல் மணிவண்ணன்தன்னைக் கவிசொல்ல வம்மினோ.

புலவர்களே, குப்பை கிளறியதைப் போன்ற செல்வத்தைப் பெரிய விஷயமாக எண்ணிப் புகழ்கிறீர்கள், அதனால் உங்களுடைய வாக்குவன்மையை இழக்கிறீர்கள், இதனால் நீங்கள் அடையப்போகும் பலன்
எதுவுமில்லை. குறையில்லாத நற்குணங்கள் நிரம்பியவன், வேண்டியவை அனைத்தையும் தருகிற குற்றமில்லாத என் வள்ளல், மணிவண்ணன், எம்பிரான், அவனைப்பற்றிப் பாட வாருங்கள்.

***

பாடல் - 6

வம்மின் புலவீர்! நும் மெய்வருத்திக் கைசெய்து உய்ம்மினோ,
இம் மன்உலகில் செல்வர் இப்போது இல்லை, நோக்கினோம்;
நும் இன் கவிகொண்டு நும்நும் இட்டாதெய்வம் ஏத்தினால்
செம் மின்சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே.

புலவர்களே, அற்ப மனிதர்களையெல்லாம் 'செல்வர்கள்' என்று எண்ணிக்கொண்டு வாழ்த்திப்பாடாதீர்கள், ஏனெனில், நிலைத்திருக்கும் இந்த உலகில் செல்வர்கள் என உண்மையில் யாருமே இல்லை, அதை
நாங்கள் பார்த்து உறுதியாகச் சொல்கிறோம்.

எனவே, இவர்களையெல்லாம் பாடுவதைவிட, நீங்கள் உங்களுடைய உடல் வருந்தும்படி கையால் ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம். ஒருவேளை நீங்கள் உங்களுடைய கவிதைகளால் உங்களுடைய இஷ்ட தெய்வங்களைப் பாட விரும்பினால், வாருங்கள், வந்து பாடுங்கள், அந்தப் பாடல்கள் அனைத்தும், சிவந்த, மின்னும் சுடர்த்
திருமுடிகொண்ட என் திருமாலுக்கே வந்துசேரும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com