மூன்றாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

மேகம்போல் வாரி வழங்கும்

சேரும் கொடை, புகழ், எல்லை இலானை, ஓர்ஆயிரம்
பேரும் உடைய பிரானைஅல்லால், மற்று யான் கிலேன்,
மாரி அனைய கை, மால்வரை ஒக்கும் திண்தோள் என்று,
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேசவே.

இந்த உலகிலே ஒரு சிறு தூசுபோலக் கிடக்கும் ஒருவனைப் பார்த்து, 'நீ மேகம்போல் வாரி வழங்கும் கைகளை உடையவன், பெரிய மலைகளைப் போன்ற திடமான தோள்களை உடையவன்'
என்றெல்லாம் பச்சைப்பொய் சொல்லலாமா?

நான் சொல்லமாட்டேன். அற்ப மனிதர்களைப் புகழமாட்டேன். வள்ளல்தன்மையிலும் புகழிலும் சிறிதும் குறைவில்லாதவன், ஆயிரம் பெயர்களைக் கொண்ட நம் தலைவன், எம்பெருமானையன்றி வேறு யாரைப் பற்றியும் பேச என்னால் இயலாது.

பாடல் - 8

வேயின் மலி புரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும்புகழ் எல்லை இலாதன பாடிப்போய்க்
காயம் கழித்து அவன் தாள் இணைக்கீழ்ப் புகும் காதலன்,
மாய மனிசரை என்சொல்வல்லேன் என் வாய்கொண்டே?

மூங்கிலைவிடச் சிறப்பான தோள்களைக் கொண்டவளான நப்பின்னையின் கணவன், எம்பெருமான், அப்பெருமானின் எல்லையில்லாத புகழைப்பற்றிப் பாடிப்பாடி என் வாழ்நாளைக் கழிப்பேன், இந்த உடலை விட்டு அவனது திருவடிகளில் சேர்ந்துவிடுவேன், இப்படிப் பெருமானின் காதலனாக இருக்கிற என்னுடைய வாய், இந்த மாய மனிதர்களைப் புகழ்ந்து பாடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com