மூன்றாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

மோட்சமாகிய வரத்தையும்

வாய்கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்,
ஆய்கொண்டசீர் வள்ளல், ஆழிப்பிரான் எனக்கே உளன்,
சாய்கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டுகொள் என்று வீடும் தரும் நின்றுநின்றே.

வாயால் மனிதர்களைப் பாடுகிற கவிஞன் நான் அல்லன், ஆராய்ந்து உணரத்தக்க சிறப்பைக்கொண்ட வள்ளல், கையிலே சக்ராயுதத்தை ஏந்திய தலைவன், எம்பெருமான் எனக்காக இருக்கிறான், அப்பெருமான் சிறப்பு நிறைந்த இவ்வுலக வாழ்க்கையை எனக்குக் கொடுத்துள்ளான், அதில் அவனை வணங்கி, நன்கு அனுபவிக்க வைத்துள்ளான், பின்னர் மறுமையில் 'தேவர்களின் உலகமாகிய பரமபதத்தையும் நீ கண்டுகொள்' என்று சொல்லி, மோட்சமாகிய வரத்தையும் முறையாகத் தருவான்.

பாடல் - 10

நின்றுநின்று பலநாள் உய்க்கும் இவ் உடல் நீங்கிப்போய்ச்
சென்றுசென்றுஆகிலும் கண்டு, சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றிஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றுஒருவர் கவி ஏற்குமே?

இந்த உலகிலே பிறக்கும் உயிர்கள் அனைத்தும், பலநாள் தங்கள் உடலிலேயே தங்கி இன்ப, துன்பங்களை அனுபவிக்கின்றன, பின்னர் அதனை நீங்கிப்போய் மீண்டும் பிறக்கின்றன, இப்படிப் பல உயிர்களும் தொடர்ந்து இறந்து, பிறந்துகொண்டிருப்பதைக் கண்ட எம்பெருமான், என்றைக்காவது இவர்கள் நம்மை வணங்குவார்கள், அதன்மூலம் தங்களுடைய பிறப்பு, இறப்புச் சுழலிலிருந்து
விடுபடுவார்கள் என்று எண்ணுகிறான், ஊக்கத்தோடு இந்த உலகைப் நல்விதத்தில் படைத்துக் காக்கின்றான், அத்தகைய எம்பெருமானின் புகழைப் பாடும் கவிஞன் நான். இன்னொருவரைப் பாடுவேனா? (மாட்டேன்.)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com