மூன்றாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

கருடன் மேல் ஏறி வருகிறவன்

சன்மம் பலபல செய்து, வெளிப்பட்டுச்
சங்கொடு சக்கரம், வில்,
ஒண்மை உடைய உலக்கை, ஒள் வாள், தண்டு
கொண்டு, புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர், அசுரரை
மாளப் படைபொருத
நன்மை உடையவன் சீர் பரவப்பெற்ற
நான் ஓர் குறைவு இலனே.

அடியவர்களுக்காகப் பல அவதாரங்கள் எடுத்து, பலவிதமாகத் தோன்றுகிறவன், சங்கு, சக்கரம், வில், அழகுடைய உலக்கை, ஒளி நிறைந்த வாள், தண்டு ஆகியவற்றை ஏந்தியவன், கருடன் மேல் ஏறி வருகிறவன், இந்த உலகிலே வலிமையுடைய அரக்கர், அசுரர்களைத் தாக்கி அழித்தவன், நன்மை மிகுந்தவன், எம்பெருமான், அத்தகைய பெருமானின் சிறப்புகளை வாழ்த்திப் போற்றுகிற எனக்கு எந்தக் குறையும் இல்லை.
•••

பாடல் - 2

குறைவுஇல் தடம்கடல் கோள் அரவு ஏறித் தன்
கோலச் செந்தாமரைக் கண்
உறைபவன்போலே ஓர் யோகு புணர்ந்த ஒளிமணி
வண்ணன் கண்ணன்,
கறைஅணி மூக்குஉடைப் புள்ளைக் கடாவி
அசுரரைக் காய்ந்த அம்மான்,
நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்
யான் ஒரு முட்டுஇலனே.

குறைவில்லாத, பெரிய பாற்கடலிலே, மிடுக்கான பாம்பாகிய ஆதிசேஷன் மேல் ஏறி, தன்னுடைய அழகிய, செந்தாமரை போன்ற கண்களை மூடித் தூங்குபவன்போல் யோகத்துயில் கொள்கிற ஒளிநிறைந்த மணியின் நிறத்தைக் கொண்டவன், கண்ணன், பகைவர்களைக் குத்திக் கொன்று, அதனால் கறை படிந்த மூக்கைக் கொண்ட கருடன் மேல் ஏறி வந்து அசுரரை அழித்த அம்மான், எம்பெருமான், அவனது நிறைந்த புகழை வாழ்த்தியும் பாடியும் ஆடியும் மகிழ்கிறேன், எனக்கு எந்தத் தடையும் இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com