மூன்றாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

திருமுடியைக் கொண்டவன்

முட்டுஇல் பல்போகத்து ஒரு தனி நாயகன்,
மூ உலகுக்கு உரிய
கட்டியை, தேனை, அமுதை, நல் பாலைக்
கனியை, கரும்புதன்னை,
மட்டுஅவிழ் தண்அம் துழாய்முடியானை
வணங்கி அவன்திறத்துப்
பட்டபின்னை இறைஆகிலும் யான் என்
மனத்துப் பரிவு இலனே.

எல்லையில்லாத பல இன்பங்களை உடையவன், தனக்கு இணையாக ஒருவரும் இல்லாத தனி நாயகன், மூன்று உலகங்களுக்கும் உரியவன், வெல்லக்கட்டி, தேன், அமுது, நல்ல பால், கனி, கரும்பு போன்றவன், தேன் பெருகுகிற, குளிர்ந்த, அழகிய துளசி மாலையைச் சூடிய திருமுடியைக் கொண்டவன், எம்பெருமான், அத்தகைய பெருமானை நான் வணங்குகிறேன், அவனுக்கு அடிமையாகிறேன், அதன்பிறகு, என் மனத்தில் துளியும் துன்பம் இல்லை.
•••

பாடல் - 4

பரிவுஇன்றி வாணனைக் காத்தும் என்று அன்று
படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும்
அங்கியும் போர் தொலையப்
பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை,
ஆயனை, பொன் சக்கரத்து
அரியினை, அச்சுதனைப் பற்றி யான் இறை
யேனும் இடர் இலனே.

அன்றைக்கு வாணாசுரன் அநிருத்தனைச் சிறைவைத்தான். அப்போது அந்த வாணாசுரனைத் துன்பமின்றிக் காப்பதற்காக முப்புரங்களை எரித்த சிவபெருமான், அவர் மகனான முருகன், பின்னர் அக்னி ஆகியோர் படையோடு வந்தார்கள், இவர்கள் அனைவரையும் போரில் எதிர்த்து நின்று வென்றவன், போர் செய்யும் சிறகுகளைக் கொண்ட கருடன்மேல் ஏறி வந்த மாயன், ஆயர் குலத்தில் பிறந்தவன், அழகிய சக்ராயுதத்தை ஏந்திய அரி, அச்சுதன்... அவனைப் பற்றிக்கொண்டேன், எனக்குச் சிறிதும் துன்பமில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com