மூன்றாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

விரும்பும் வடிவத்தில்

துக்கம்இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி,
துழாய் அலங்கல் பெருமான்,
மிக்க பல் மாயங்களால் விகிர்தம் செய்து
வேண்டும் உருவுகொண்டு
நக்கபிரானோடு அயன்முதலாக எல்லாரும்,
எவையும் தன்னுள்
ஒக்க, ஒடுங்க, விழுங்கவல்லானைப் பெற்று
ஒன்றும் தளர்வுஇலனே.

துக்கமில்லாத ஞானத்தைக் கொண்ட சுடர் ஒளி வடிவானவன், துளசி மாலை அணிந்த பெருமான், மிகுந்த பல மாயங்களாலே பலவிதமான செயல்களைச் செய்கிறவன், விரும்பும் வடிவத்தில் தோன்றுகிறவன், சிவன், பிரமன் தொடங்கி எல்லாரையும், எல்லாவற்றையும் விழுங்கித் தனக்குள் மொத்தமாக அடக்கிக்கொள்ளவல்லவன், எம்பெருமான், அவனை இறைவனாகப் பெற்றேன், எனக்குத் தளர்வு ஏதுமில்லை.

•••

பாடல் - 10

தளர்வுஇன்றியே என்றும் எங்கும் பரந்த
தனிமுதல் ஞானம் ஒன்றாய்,
அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால்
அருஆகி நிற்கும்
வளர்ஒளி ஈசனை, மூர்த்தியை, பூதங்கள்
ஐந்தை, இருசுடரை,
கிளர்ஒளி மாயனை, கண்ணனைத் தாள்பற்றி
யான் என்றும் கேடு இலனே.

தளர்வில்லாமல் என்றும், எங்கும் பரந்து விரிந்திருக்கிறவன், தனித்துவமான, அனைத்துக்கும் காரணமான, இணையற்ற ஞானவடிவானவன், அளவுள்ள ஐம்புலன்களாலும் அறியப்படாதபடி அருவாகி நிற்பவன், வளரும் ஒளியைக் கொண்ட ஈசன், மூர்த்தி, ஐம்பூதங்களுமானவன், சூரியன், சந்திரன் என்கிற இரு சுடர்களுமானவன், கிளர்ந்துகொண்டே இருக்கிற ஒளியைக் கொண்ட மாயன், கண்ணன், எம்பெருமான், அத்தகைய பெருமானின் திருவடிகளைப் பற்றினேன், எனக்கு என்றைக்கும் எந்தக் கேடும் இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com