நான்காம் பத்து ஒன்றாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

கண்ணனின் திருவடிகளை

அடிசேர் முடியினர் ஆகி அரசர்கள்தாம் தொழ
இடிசேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடிசேர் துகளாய்ப் போவர்கள், ஆதலில் நொக்குஎனக்
கடிசேர் துழாய்முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.

அரசர்களெல்லாம் வந்து காலடியில் விழுந்து வணங்க, முற்றத்திலே இடிபோல் முரசுகள் ஒலிக்கப் பேரரசர்களாக வாழ்ந்தவர்களெல்லாம், என்றைக்கேனும் வறுமைநிலையை அடையக்கூடும். அப்போது, அவர்கள் பொடிசேர்ந்த துகளாகிப்போவார்கள்.

ஆகவே, இந்த நிலையற்ற தன்மையை உணருங்கள், நறுமணம் வீசும் துளசிமாலையை அணிந்த திருமுடியைக்கொண்ட கண்ணனின் திருவடிகளை நினையுங்கள்.

பாடல் - 4

நினைப்பான் புகில் கடல் எக்கலின் நுண்மணலில் பலர்
எனைத்து ஓர் உகங்களும் இவ் உலகு ஆண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்குஅற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டுஇலம்
பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ.

நினைத்துப்பார்த்தால், பல யுகங்களாக இந்த உலகத்தை ஆண்ட அரசர்கள் ஏராளம், கடலருகே இருக்கும் மணல்மேட்டில் உள்ள நுண்மணல்களின் எண்ணிக்கையைவிட, அவர்களுடைய எண்ணிக்கை அதிகம், ஆனால், அத்தனை அரசர்களும் வாழ்ந்து, இறந்துபோனார்கள், அவர்கள் வாழ்ந்த வீடுகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்தன, இதைத்தவிர வேறெதையும் இந்த உலகம் பார்த்ததில்லை, ஆகவே, இந்த நிலையற்ற தன்மையை உணருங்கள், பனை மரம் போன்ற கால்களைக் கொண்ட மதயானையைக் கொன்ற கண்ணனின் திருவடிகளை வணங்குங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com