மூன்றாம் பத்து முதல் திருமொழி - பாடல் 9, 10, 11

வேதங்கள் போற்றும் இறைவன்

மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்த்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ஊர்ந்து தோன்றினையே,
மழுங்காத ஞானமே படையாக மலர்உலகில்
தொழும்பு ஆயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே?

உன்னைத் தொழுகின்ற, உன்மேல் அன்பு செலுத்துகின்ற கஜேந்திரன் என்ற யானையைக் காப்பதற்காக வந்தவனே, மழுங்காத கூரான நுனியைக்கொண்ட சக்ராயுதத்தை நல்ல வலக்கையில் ஏந்தியபடி கருட வாகனத்தில் தோன்றியவனே, இந்த உலகில் உனக்கு அடிமைகளாக உள்ளவர்கள் முன்னே, மழுங்காத ஞானமே படையாகக்கொண்டு வந்தால் என்ன? அவர்களைக் காத்தால் என்ன? அதனால் உன்னுடைய பேரொளி மறைந்துவிடுமோ?

•••

பாடல் - 10

மறைஆய நால்வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே,
முறையால் இவ் உலகு எல்லாம் படைத்து, இடந்து,
                    உண்டு, உமிழ்ந்து, அளந்தாய்,
பிறைஏறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
இறைஆதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல், இது வியப்பே.

மறையாகிய நான்கு வேதங்களுக்குள் நின்ற மலர்ச்சுடரே, முறைப்படி இந்த உலகங்கள் அனைத்தையும் படைத்தாய், பிரளயத்தின்போது அவற்றை எடுத்தாய், உண்டாய், உமிழ்ந்தாய், வாமனாவதாரத்தில் அவற்றை அளந்தாய், திருமுடியிலே பிறை நிலவைக்கொண்ட சிவபெருமானும் நான்முகனான பிரம்மனும் இந்திரனும், நீயே தலைவன் என்பதை அறிந்து உன்னைப் போற்றுகிறார்கள், நீ கம்பீரமாக வீற்றிருக்கிறாய், இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது?

•••

பாடல் - 11

வியப்புஆய வியப்புஇல்லா மெய்ஞ்ஞானவேதியனைச்
சயப்புகழார் பலர்வாழும் தடம் குருகூர்ச் சடகோபன்
துயக்குஇன்றித் தொழுதுஉரைத்த ஆயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்புஅறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே.

பிறரிடம் வியப்பாகக் காணப்படும் குணங்களெல்லாம் எம்பெருமானிடம் இயல்பாகக் காணப்படும், அத்தகைய மெய்ஞ்ஞானப் பெருமான், வேதங்கள் போற்றும் இறைவன் அவன்,

வெற்றியால் புகழடைந்தவர்கள் பலர் வாழுகின்ற பெரிய குருகூரில் வாழும் சடகோபன், அந்தப் பெருமானின் பெருமைகளை ஐயமின்றி உணர்ந்தார், தொழுதார், ஆயிரம் பாடல்களைப் பாடினார்,

அவற்றுள் இந்தப் பாடல்களையும் வாசிக்கிறவர்கள், ஒலி நிறைந்த கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தில் உய்வார்கள், அவர்களுடைய பிறவிநோய் அறுந்துபோகும், பிறப்பில்லாப் பெருவாழ்வு வாழ்வார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com