மூன்றாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

பரஞ்சோதியாகிய சுடர்வடிவான இறைவன்

அண்ணல், மாயன், அணிகொள் செந்தாமரைக்
கண்ணன், செங்கனிவாய்க் கருமாணிக்கம்,
தெள்நிறை சுனைநீர்த் திருவேங்கடத்து
எண்இல் தொல்புகழ் வானவர் ஈசனே.

எங்கள் அண்ணல், மாயன், அழகிய செந்தாமரை போன்ற கண்களைக் கொண்டவன், சிவந்த கனிவாயைக்கொண்ட கருமாணிக்கம், தெளிந்த நீரைக்கொண்ட சுனைகள் நிறைந்த திருவேங்கடத்தில் எழுந்தருளியிருப்பவன், எண்ணமுடியாத பழைமையான புகழைக்கொண்ட வானோர் தலைவன் எம்பெருமான்.

•••

பாடல் - 4

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு?
நீசனேன், நிறைவு ஒன்றும்இலேன் என்கண்
பாசம்வைத்த பரம்சுடர்ச்சோதிக்கே?

நான் தாழ்ந்தவன், நல்ல குணங்கள் எவையும் இல்லாதவன், ஆயினும், பரஞ்சோதியாகிய சுடர்வடிவான இறைவன் என்மீது பாசம்வைத்தான், அத்தகைய பெருமான், வானோர்க்கெல்லாம் தலைவன் என்று நான் போற்றிக்கூறுவேன், அதனால் அந்தத் திருவேங்கடத்தானுக்கு ஏதும் பெருமை உண்டோ? (ஏற்கெனவே மிகுந்த பெருமைகொண்டவன் அவன், தாழ்ந்தவனான நான் இதைச் சொல்வதால் அவனுக்கென்ன கூடுதல் பெருமை வந்துவிடப்போகிறது!)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com