மூன்றாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 9, 10, 11

பிறப்பு, இறப்பு என்கிற சுழல்

ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப்பிணி
வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித்தாமரை
வாயுளும் மனத்துளும் வைப்பார்கட்கே.

திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கும் ஆயன், எம்பெருமான், அன்றலர்ந்த மலர்போன்ற அவனது திருவடிகளை வாயிலும் மனத்திலும் வைப்பவர்களுடைய பிறவிநோயைப் போக்குவான் அவன், அதனால், அவர்களுடைய பிறப்பு, மூப்பு, இறப்பு என்கிற சுழல் ஓய்ந்துபோகும், (அவர்கள் பிறவாவரம் பெறுவார்கள்.)

•••

பாடல் - 10

வைத்த நாள்வரை எல்லை குறுகிச்சென்று
எய்த்து இளைப்பதன்முன்னம் அடைமினோ,
பைத்த பாம்புஅணை பொன் திருவேங்கடம்
மொய்த்த சோலைமொய் பூந்தடந்தாள்வரை.

நமக்கென்று தீர்மானித்த வாழ்நாள் முடிகிற நேரம் வரும்வரை காத்திருக்க வேண்டாம், உடல் இளைத்து, நெஞ்சு இளைத்து ஏங்கவேண்டாம், (அதற்குமுன்பாகவே பெருமானை வணங்குங்கள்.) படமெடுத்த பாம்பைப் படுக்கையாகக்கொண்ட எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருத்தலம், அழகிய திருவேங்கடம், அந்தத் திருமலையின் சோலைகள், பூக்கள் நிறைந்த குளங்களைக்கொண்ட தாழ்வரையை அதற்குமுன்பே (இளமைக் காலத்திலேயே) சென்றுசேருங்கள்.

•••

பாடல் - 11

தாள்பரப்பி மண் தாவிய ஈசனை
நீள்பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ்இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி, ஞாலம் புகழவே.

திருவடிகளைப் பரப்பி உலகை அளந்தவர் எம்பெருமான், உயர்ந்த சோலைகளையுடைய குருகூர்ச் சடகோபன், அப்பெருமானை ஒப்பற்ற ஆயிரம் பாடல்களில் பாடினார், அவற்றில் இந்தப் பத்து பாடல்களையும் பாட வல்லவர்கள் உலகம் புகழ நல்வாழ்வைப் பெறுவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com