மூன்றாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 1, 2

குன்றுகள் அனைத்தும் அவனே என்பேனா?

புகழும் நல் ஒருவன் என்கோ,
பொருஇல் சீர்ப் பூமி என்கோ,
திகழும் தண் பரவை என்கோ,
தீ என்கோ, வாயு என்கோ,
நிகழும் ஆகாசம் என்கோ,
நீள்சுடர் இரண்டும் என்கோ,
இகழ்வுஇல் இவ் அனைத்தும் என்கோ,
கண்ணனைக் கூவும் ஆறே.

கண்ணனை நான் எப்படி அழைப்பேன்!

வேதங்களும் புராணங்களும் புகழுகின்ற நல்லவன், இணையற்றவன் என்பேனா? இணையில்லாத சிறப்பைக்கொண்ட பூமி என்பேனா? விளங்குகின்ற குளிர்ந்த கடல் என்பேனா? தீ என்பேனா? வாயு என்பேனா? விளங்கும் வானம் என்பேனா? மிகுந்த ஒளியைக்கொண்ட சூரிய, சந்திரர்கள் என்பேனா? இவை அனைத்தும் என்பேனா?

•••

பாடல் 2

கூவும் ஆறு அறியமாட்டேன்,
குன்றங்கள் அனைத்தும் என்கோ,
மேவு சீர் மாரி என்கோ,
விளங்கு தாரகைகள் என்கோ,
நா இயல் கலைகள் என்கோ,
ஞான நல் ஆவி என்கோ,
பாவு சீர்க் கண்ணன் எம்மான்
பங்கயக் கண்ணனையே.

பரவுகின்ற சிறப்பைக்கொண்ட கண்ணன், நம் தலைவன், தாமரை போன்ற கண்களை உடைய எம்பெருமானை நான் எப்படி அழைப்பேன்!

குன்றுகள் அனைத்தும் அவனே என்பேனா? விளங்கும் சிறப்பைக்கொண்ட மழை என்பேனா? சிறந்து விளங்கும் நட்சத்திரங்கள் என்பேனா? நாவினால் இயற்றப்பட்ட கலைகள் என்பேனா? ஞானத்துக்குக் காரணமான நல்ல ஒலிகள் என்பேனா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com