மூன்றாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 7, 8

உலகங்களையெல்லாம் படைத்து

வானவர் ஆதி என்கோ,
வானவர் தெய்வம் என்கோ,
வானவர் போகம் என்கோ,
வானவர் முற்றும் என்கோ,
ஊனம்இல் செல்வம் என்கோ,
ஊனம்இல் சுவர்க்கம் என்கோ,
ஊனம்இல் மோக்கம் என்கோ,
ஒளிமணிவண்ணனையே.

ஒளிநிறைந்த மணிபோன்ற வண்ணம்கொண்ட எம்பெருமானை நான் எப்படி அழைப்பேன்?

வானவர்களின் வாழ்வுக்குக் காரணமான ஆதி முதல்வன் என்பேனா? வானவர்களின் தெய்வம் என்பேனா? வானவர்களின் இன்பம் என்பேனா? வானவர்களுக்கு (இங்கே சொல்லப்படாத) அனைத்தும் என்பேனா? குறையில்லாத செல்வம் என்பேனா? குறையில்லாத சுவர்க்கம் என்பேனா? குறையில்லாத மோட்சம் என்பேனா?

•••

பாடல் - 8

ஒளிமணிவண்ணன் என்கோ,
ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர்மதிச் சடையன் என்கோ,
நான்முகக்கடவுள் என்கோ,
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்
படைத்து, அவை ஏத்த நின்ற
களிமலர்த் துளவன் எம்மான்,
கண்ணன், மாயனையே.

உலகங்களையெல்லாம் படைத்து, அன்போடு காத்து, அவை போற்றிப் புகழும்படி நிற்கின்ற பெருமான், தேன் வழியும் மலர்களைக்கொண்ட துளசிமாலை அணிந்தவன், நம் தலைவன், கண்ணன், மாயனை நான் எப்படி அழைப்பேன்?

ஒளிவீசும் மணிபோன்ற வண்ணம்கொண்டவன் என்பேனா? ஒப்பற்றவன் என்று தன்னுடைய அடியவர்களெல்லாம் துதிக்கும்படி நின்ற, குளிர்ந்த சடையைக்கொண்ட சிவபெருமான் என்பேனா? நான்முகக் கடவுளான பிரம்மன் என்பேனா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com