மூன்றாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 9, 10

ஆதிசேஷன்மேல் பள்ளிகொண்டு

கண்ணனை, மாயன்தன்னை,
கடல்கடைந்து அமுதம்கொண்ட
அண்ணலை, அச்சுதனை,
அனந்தனை, அனந்தன் தன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை,
ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணும்ஆறு அறியமாட்டேன்,
யாவையும் எவரும் தானே.

கண்ணனை, மாயனை, கடலைக் கடைந்து அமுதம் தந்த அண்ணலை, அச்சுதனை, எல்லையற்ற நற்குணங்கள் கொண்டவனை, ஆதிசேஷன்மேல் பள்ளிகொண்டு நன்கு உறைகிறவனை, உலகை உண்டு, உமிழ்ந்த அந்தத் திருமாலை எப்படி எண்ணுவது? எனக்குத் தெரியவில்லையே!

இங்குள்ள எல்லாப் பொருள்களும் அவனே, எல்லா உயிர்களும் அவனே.

•••

பாடல் - 10

யாவையும் எவரும் தானாய்
அவர் அவர் சமயம்தோறும்
தோய்வுஇலன், புலன் ஐந்துக்கும்
சொலப்படான், உணர்வின் மூர்த்தி,
ஆவிசேர் உயிரின் உள்ளால்
ஆதும் ஓர் பற்றுஇலாத
பாவனை அதனைக்கூடில்
அவனையும் கூடலாமே.

எல்லாப் பொருள்களாகவும் எல்லா உயிர்களாகவும் திகழ்கிற பெருமான் அவன், அதேசமயம், அந்தப்பொருள்களுக்குள், உயிர்களுக்குள் அவன் தோய்ந்துவிடுவதில்லை, (அவற்றின் சுக துக்கங்களில் பங்கேற்பதில்லை.) ஐந்து புலன்களாலும் அறியப்படாதவன், உணர்வாலே அறியப்படும் மூர்த்தி அவன், (உயிர்களுக்குள் இருந்தபடி அவற்றின் சுக துக்கங்களில் பங்கேற்காமல் இருப்பது எப்படி சாத்தியம்?) ஆன்மாவானது உடலுக்குள் இருக்கிறது, ஆனால், அந்த உடலின் வளர்தலோ தேய்தலோ அந்த ஆன்மாவைப் பாதிப்பதில்லை, (அதுபோல, ஆன்மாவுக்குள் பெருமான் இருக்கிறான், அந்த ஆன்மாவின் இன்பதுன்பங்கள் அவனுக்கு உண்டாகாது.)

இதனை அறிந்தால், அவனைக் கூடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com