மூன்றாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி -  பாடல் 1, 2

மொய்க்கின்ற வண்டுகளைக்கொண்ட

மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை
முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள்செய்த
கார்முகில்போல்வண்ணன், கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர்,
தண்கடல் வட்டத்து உள்ளீரே.

மொய்க்கின்ற வண்டுகளைக்கொண்ட பெரிய பூஞ்சோலையால் சூழப்பட்ட ஒரு பொய்கையிலே கஜேந்திரன் என்கிற யானை நின்றது. அப்போது, அதன் காலை ஒரு முதலை கவ்விக்கொண்டது, ஆகவே, அந்த யானை தவித்தது. அத்தகைய யானைக்கு அருள்செய்த பெருமான், கருமேகம்போன்ற வண்ணம்கொண்டவன், கண்ணன், நம் தலைவன், அவனுடைய பெயரைச்சொல்லிப் பாடி, எழுந்து, பறந்து துள்ளாதவர்களால் இந்த உலகில் என்ன பயன்? குளிர்ச்சியான கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் உள்ளவர்களே, நீங்களே சொல்லுங்கள்!

•••

பாடல் - 2

தண்கடல் வட்டத்து உள்ளாரைத்
தமக்கு இரையாத் தடிந்துஉண்ணும்
திண்கழல்கால் அசுரர்க்குத்
தீங்குஇழைக்கும் திருமாலைப்
பண்கள் தலைக்கொள்ளப் பாடிப்
பறந்தும் குனித்தும் உழலாதார்
மண்கொள் உலகில் பிறப்பார்
வல்வினை மோத, மலைந்தே.

குளிர்ந்த கடலால் சூழப்பட்ட உலகத்திலே உள்ள மக்களையெல்லாம் அசுரர்கள் கொன்று உண்பார்கள், வலிமையான வீரக்கழல் அணிந்த அந்த அசுரர்களுக்குத் தீங்கு இழைப்பவன் திருமால், அத்தகைய திருமாலைப் பற்றிப் பண்ணோடு பாடிக் குதித்து ஆடி மகிழாதவர்களை வலிமையான வினை தாக்கும், அவர்கள் மண்ணைக்கொண்ட இவ்வுலகில் மீண்டும் பிறந்து வருந்துவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com