ஆறாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

இசையைக் கேட்டதும்
ஆறாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

பாடல் - 1

மின் இடை மடவார்கள் நின்னருள் சூடுவார்முன்பு
                                                              நான் அது அஞ்சுவன்
மன் உடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே,
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் இனி அது
                                                  கொண்டு செய்குவது என்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ.

(ஒரு சிறுமி கண்ணனிடம் சொல்கிறாள்) ஆண்களில் சிறந்தவனே, இராவணன் ஆண்ட இலங்கையின் மதில் சுவர்களை அழித்த மாயவனே, உன்னுடைய விளையாட்டை நான் அறிவேன், நீ உன் வேலையில் கவனமாக இருப்பாய் என்பதை அறிவேன், மின்னல்போன்ற இடையைக்கொண்ட பெண்களுடன் நீ பழகி, அவர்களுக்கு அருள்செய்வாய், இப்போது நீ என்னுடன் பேசுவதைக் கண்டால், அவர்கள் விரும்பமாட்டார்கள், நீ சற்றே காலந்தாழ்த்தி அங்கே சென்றால் அவர்கள் உன்மேல் வருத்தப்படுவார்கள், அதனால் நீ வருந்துவாய், அதையெண்ணி நான் அஞ்சுகிறேன், பெருமானே, என்னுடைய பந்தையும் அம்மானைக்காயையும் தந்துவிடு, இங்கிருந்து சென்றுவிடு.

******

பாடல் - 2

போகு நம்பீ, உன் தாமரைபுரை கண் இணையும்
                                                      செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்,
தோகை மாமயிலார்கள் நின் அருள் சூடுவார்
                                               செவி ஓசை வைத்து எழ
ஆகள் போகவிட்டுக் குழல் ஊது போய் இருந்தே.

(ஒரு சிறுமி கண்ணனிடம் சொல்கிறாள்) ஆண்களில் சிறந்தவனே, இங்கே வராதே, போய்விடு, தாமரைபோன்ற உன்னுடைய திருக்கண்களும், சிவந்த வாயின் புன்னகையும் எங்களைத் துன்புறுத்துகின்றன, உன்னை எண்ணி அழிவதற்காகவே நாங்கள் நோன்பிருக்கிறோம், நீ எங்களிடம் வராதே, தோகைமயில்போன்ற அந்தப்பெண்களிடம் செல், அவர்கள் உன்னுடைய அருளைச் சூடிக்கொள்கிறவர்கள், நீ பசுக்களை மேய்க்கும்போது, ‘இந்தப் பசுக்களுக்காகதான் குழலூதுகிறேன்’ என்கிற பாவனையில் குழலை ஊது, அந்த இசையைக் கேட்டதும் அப்பெண்கள் அங்கே வருவார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com