ஆறாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

அகப்படும்படி செய்தாய்
ஆறாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

பாடல் - 9

உகவையால் நெஞ்சம் உள் உருக்கி உன்
                          தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப்படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்,
தகவு செய்திலை, எங்கள் சிற்றிலும் யாம்
                         அடு சிறுசோறும் கண்டு, நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.

(ஒரு சிறுமி கண்ணனிடம் பேசுகிறாள்) பெருமானே, நாங்கள் மணலில் சிறு வீடுகட்டி விளையாடுகிறோம், அங்கே சிறுசோறு சமைத்து விளையாடுகிறோம், இவற்றைப்பார்த்து நீ உன்னுடைய திருமுகத்தில் ஒளி திகழும்படி புன்முறுவல் செய்யவில்லை, உன்னுடைய திருவடியாலே அவற்றைச் சிதைத்தாய், நாங்கள் மகிழ்ச்சியால் உள்ளே உருகி, உன்னுடைய தாமரைபோன்ற பெரிய கண்களின் உள்வலையிலே அகப்படும்படி செய்தாய், இது உனக்குத் தகுதியான செயலா?

***

பாடல் - 10

நின்று இலங்கு முடியாய், இருபத்துஓர்கால்
                                                             அரசுகளை கட்ட
வென்றி நீள் மழுவா, வியன் ஞாலம் முன் படைத்தாய்,
இன்று இவ் ஆயர் குலத்தை வீடு உய்யத் தோன்றிய
                                                            கருமாணிக்கச்சுடர்,
நின்தன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சி யாமே.

(ஒரு சிறுமி கண்ணனிடம் பேசுகிறாள்) நிலைபெற்றுத் திகழும் திருமுடியைக்கொண்டவனே, இருபத்தொரு தலைமுறை அரசர்களைக் குலத்தோடு அழித்த, வெற்றியுடைய, நீண்ட மழு என்னும் ஆயுதத்தைக் கொண்டவனே, பெரிய உலகத்தை முன்பு படைத்தவனே, இன்று இந்த ஆயர் குலம் வீடுபேறு பெறுவதற்காகத் தோன்றிய கருமாணிக்கச்சுடரே, ஆய்ச்சியராகிய நாங்கள் என்றைக்கும் உன்னாலே துன்பத்தையே அனுபவிக்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com