ஆறாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 1, 2

மாயச்செயல்களைச் செய்தான்
ஆறாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 1, 2

பாடல் - 1

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும், குன்றம்
                                                           ஒன்று ஏந்தியதும்,
உரவுநீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும் உள்பட
                                                           மற்றும் பல
அரவில் பள்ளிப்பிரான்தன் மாய வினைகளையே
                                                           அலற்றி
இரவும் நல்பகலும் தவிர்கிலன், என்ன குறைவு
                                                           எனக்கே?

ஆதிசேஷனாகிய பாம்புப்படுக்கையிலே துயில்கொள்ளும் பெருமான், ஆய்ச்சியரோடு சேர்ந்து குரவைக்கூத்து ஆடினான், கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தான், வலிய தண்ணீரிலே இருந்த காளிங்கன் என்னும் பாம்பைக் கோபித்தான், இதுபோன்ற மற்ற பல மாயச்செயல்களைச் செய்தான், இரவிலும் நல்ல பகலிலும் நான் அப்பெருமானின் மாயச்செயல்களையே சொல்லி அலற்றுகிறேன். எனக்கு என்ன குறை? (ஏதுமில்லை.)

***

பாடல் - 2

கேயத் தீங்குழல் ஊதிற்றும், நிரை மேய்த்ததும்,
                                                           கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும்,
                                                           மற்றும் பல
மாயக் கோலப்பிரான்தன் செய்கை நினைந்து,
                                                           மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்தபோது எனக்கு எவ் உலகம் நிகரே.

இனிய புல்லாங்குழலிலே பாடல்களை ஊதினான் எம்பெருமான், பசுக்கூட்டங்களை மேய்த்தான், கெண்டைபோன்ற ஒளிவீசும் கண்களைக்கொண்ட, நறுமணம் வீசும் கூந்தலைக்கொண்ட நப்பின்னையின் தோள்களை அணைத்தான், மாயனாகிய அழகிய எம்பெருமான் இப்படி இன்னும் பல திருச்செயல்களைச் செய்கிறான், அவற்றை நினைத்து, மனம் குழைந்து, அன்போடு நான் வாழ்கிறேன், ஆகவே, எனக்கு எந்த உலகம் ஒப்பாகும்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com