ஆறாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 9, 10

மிகப்பெரிய போரை
ஆறாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 9, 10

பாடல் - 9

கலக்க ஏழ்கடல், ஏழ்மலை, உலகு ஏழும் கழியக் கடாய்
உலகத்தேர் கொடுசென்ற மாயமும் உட்பட மற்றும் பல
வலக்கை ஆழி, இடக்கைச் சங்கம் இவை உடை
                                                                      மால்வண்ணனை
மலக்கு நா உடையேற்கு மாறு உளதோ
                                                                     இம்மண்ணின்மிசையே?

ஏழு கடல்களும், ஏழு மலைகளும், ஏழு உலகங்களும் கலங்கும்படி உலகைக் கடந்து தேரோட்டியவன் எம்பெருமான், இவ்வாறு அவன் இன்னும் பல மாயச்செயல்களைப் புரிந்துள்ளான், வலக்கையில் சக்ராயுதம், இடக்கையில் திருச்சங்கு ஆகியவற்றைக்கொண்ட அந்த மால்வண்ணனைப் பாடும் பாக்கியம் என்னுடைய நாவுக்குக் கிடைத்துள்ளது, அந்த அற்பமான நாக்கு அதற்கு என்ன பேறு செய்ததோ! இந்த உலகில் அதற்கு இணையாக யாருண்டு? (யாருமில்லை.)

***

பாடல் - 10

மண்மிசைப் பெரும் பாரம் நீங்க ஓர் பாரத
                                                          மாபெரும் போர்
பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட
                                                         நூற்றிட்டுப் போய்
விண்மிசைத் தன தாமமே புக மேவிய
                                                        சோதிதன் தாள்
நண்ணி நான் வணங்கப்பெற்றேன், எனக்கு
                                                       ஆர் பிறர் நாயகரே?

மண்ணின் பெரிய பாரம் நீங்குவதற்காக, பாரதப்போர் என்னும் மிகப்பெரிய போரை உண்டாக்கி, அதிலே பல மாயங்கள் செய்து, கௌரவர்களின் சேனை பாழாகும்படி அவர்களைக் கொன்றான், பரமபதத்திலே எழுந்தருளினான், சோதிவடிவான அந்தப் பெருமானின் திருவடிகளை அடைந்து, வணங்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. என்னைவிடச் சிறந்தவர்கள் யார்? (யாருமில்லை.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com