ஆறாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

எழுந்தருளியுள்ள
ஆறாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

பாடல் - 1

துவள்இல் மாமணிமாடம் ஓங்கு
                       தொலைவில்லிமங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர், உமக்கு ஆசை
                      இல்லை, விடுமினோ,
தவள ஒண் சங்கு, சக்கரம் என்றும், தாமரைத்
                      தடம்கண் என்றும்
குவளை ஒண்மலர்க்கண்கள் நீர் மல்க நின்று
                     நின்று குமுறுமே.

தாய்மார்களே, குற்றமற்ற, பெரிய மணிகள் பதிக்கப்பட்ட மாடங்கள் உயர்ந்து விளங்குகிற நகரம், தொலைவில்லிமங்கலம் எனும் திருத்தலம், அங்கே எழுந்தருளியுள்ள எம்பெருமானை இவள் தொழுகிறாள், இனி இவளுக்கு வேறு விஷயங்களில் விருப்பம் இருக்காது, அவளை மீட்கலாம் என்று நீங்கள் ஆசைப்படுவது நடக்காது, அவளை அவள் போக்கில் விட்டுவிடுங்கள்,  இதோ பாருங்கள், எம்பெருமானின் வெண்ணிறமான, ஒளிவீசும் சங்கு, சக்கரத்தைப்பற்றியும், தாமரைபோன்ற பெரிய திருக்கண்களைப்பற்றியும் அவள் வாய்விட்டுப் புலம்புகிறாள், குவளைமலர்போன்ற தன்னுடைய ஒளிவீசும் கண்களில் நீர் மல்க நின்று குமுறுகிறாள்.

***

பாடல் - 2

குமுறும் ஓசை, விழவு ஒலித்
                     தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு
அமுத மென்மொழியாளை நீர் உமக்கு
                     ஆசைஇன்றி அகற்றினீர்,
திமிர்கொண்டால் ஒத்துநிற்கும் மற்று இவள்,
                     தேவதேவபிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கு
                    ஒசிந்து கரையுமே.

ஊர்முழுக்கப் பலவிதமான ஓசைகள், விழாக்களின் ஒலிகள் கேட்கிற தொலைவில்லிமங்கலத்துக்கு உங்கள் மகளை அழைத்துச்சென்றீர்கள், அமுதம்போன்ற மென்மையான சொற்களைப் பேசும் இந்தப்பெண்ணை உங்களுக்கு விருப்பமில்லாதபடி.  எம்பெருமானுக்கு விட்டுக்கொடுத்துவிட்டீர்கள், இதோ பாருங்கள், பெருமான்முன்னே இவள் உறைந்து நிற்கிறாள், செய்வதறியாது திகைக்கிறாள், ‘தேவதேவபிரான்’ என்று இவளுடைய வாய் நெளிகிறது, கண்களில் நீர் மல்குகிறது, நெகிழ்ந்து, ஒசிந்து, கரைகிறாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com