ஆறாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

உலகம்முழுவதையும்
ஆறாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

பாடல் - 3

கரைகொள் பைம்பொழில், தண்பணைத்
           தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு
உரைகொள் இன்மொழியாளை நீர் உமக்கு
          ஆசைஇன்றி அகற்றினீர்,
திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும், திசை
         ஞாலம் தாவி அளந்ததும்,
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும்கண்
         நீர் மல்க நிற்குமே.

ஆற்றங்கரைமுழுக்கப் பசுமையான சோலைகள், குளிர்ந்த மருதநில வயல்கள் நிறைந்துள்ள திருநகரம் தொலைவில்லிமங்கலம், நீங்கள் அங்கே வந்து, இனிமையான சொற்களைப் பேசும் இந்தப் பெண்ணை உங்களுக்கு விருப்பமில்லாதபடி எம்பெருமானுக்கு விட்டுக்கொடுத்துவிட்டீர்கள், இதோ பாருங்கள், அலைகள் வீசும் பாற்கடலிலே அப்பெருமான் பள்ளிகொண்டதையும், திசைகளோடு கூடிய உலகம்முழுவதையும் தாவி அளந்ததையும், பசுக்கூட்டங்களை மேய்த்ததையும் பிதற்றிக்கொண்டு, நீண்ட கண்களிலே நீர் மல்க இவள் நிற்கிறாள்.

***

பாடல் - 4

நிற்கும் நால்மறைவாணர் வாழ்
             தொலைவில்லிமங்கலம் கண்டபின்
அற்கம் ஒன்றும் அற உறாள், மலிந்தாள்,
             கண்டீர் அன்னைமீர்,
கற்கும் கல்வி எல்லாம் கரும்கடல்வண்ணன்,
             கண்ணபிரான் என்றே
ஒற்கம் ஒன்றும் இலள், உகந்து உகந்து
            உள்மகிழ்ந்து குழையுமே.

தாய்மார்களே, நிலைத்துநிற்கும் நான்கு வேதங்களிலே வல்லவர்கள் வாழ்கின்ற திருநகரம் தொலைவில்லிமங்கலம், அந்நகரைக் கண்டபிறகு, இவளுடைய அடக்கம் என்கிற குணம் சென்றுவிட்டது, உங்களை மீறி ஏதேதோ
செய்கிறாள், பாருங்கள், கற்கும் கல்வியெல்லாம் கரும்கடல்வண்ணனாகிய அந்தப் பெருமான்தான், கண்ணபிரான்தான் என்று இவள் சொல்கிறாள், தளர்ச்சியில்லாமல் அப்பெருமானை வேண்டுகிறாள், மனத்துக்குள் மகிழ்ந்து, மகிழ்ந்து குழைகிறாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com