ஆறாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

தலைவணங்குகிறாள்
ஆறாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

பாடல் - 9

இரங்கி நாள்தொறும் வாய் வெரீஇ இவள்
                                  கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும்வகை மணிவண்ணவோ
                                என்று கூவுமால்,
துரங்கம் வாய் பிளந்தான் உறை தொலைவில்லி
                               மங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித் தொழும் அவ் ஊர்த் திருநாமம்
                              கற்றதற்பின்னையே.

குதிரை வடிவில் வந்த கேசி என்ற அசுரனின் வாயைப் பிளந்தவன் எம்பெருமான், அத்தகைய பெருமான் எழுந்தருளியிருக்கிற தொலைவில்லிமங்கலம் என்ற திருத்தலத்தின் திருநாமத்தை இவள் கற்றுக்கொண்டுவிட்டாள், அதன்பிறகு, நாள்தோறும் அந்தப் பெருமானைதான் நினைத்துக்கொண்டிருக்கிறாள், கை கூப்பித் தொழுகிறாள், மனம் இரங்குகிறாள், வாய் அச்சத்தில் குழறுகிறது, கண்ணில் நீர் சுழல்கிறது, ‘மணிவண்ணா’ என்று கூவுகிறாள், இவளுடைய நிலையைப் பார்த்து உயிரில்லாத மரங்களும் இரங்குகின்றன.

***

பாடல் - 10

பின்னைகொல்? நிலமாமகள்கொல்? திருமகள்கொல்?
                                                          பிறந்திட்டாள்
என்ன மாயம்கொலோ? இவள் நெடுமால் என்றே
                                                           நின்று கூவுமால்,
முன்னி வந்தவன் நின்று இருந்து உறையும்
                                                           தொலைவில்லிமங்கலம்
சென்னியால் வணங்கும் அவ் ஊர்த் திருநாமம் கேட்பது
                                                          சிந்தையே.

இவள் நப்பின்னையோ? நிலமகளோ? திருமகளோ? இங்கே வந்து இவள் பிறந்தது என்ன மாயமோ! எந்நேரமும் ‘நெடுமால்’ என்றே கூவுகிறாள், முற்பட்டு வந்து அப்பெருமான் நின்று இருந்து உறைகிற தொலைவில்லிமங்கலத்தையே எண்ணித் தலைவணங்குகிறாள், எந்நேரமும் அவ்வூரின் திருநாமத்தைக் கேட்பதே தன்னுடைய சிந்தனை என்று வாழ்கிறாள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com