ஆறாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

சிந்தும் மலர்களை
ஆறாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

பாடல் - 1

மாலுக்கு, வையம் அளந்த மணாளற்கு,
நீலக் கருநிற மேக நியாயற்கு,
கோலச் செந்தாமரைக்கண்ணற்கு என் கொங்கு அலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே.

திருமால், வாமனனாக வந்து உலகத்தை அளந்த மணாளர், நீலக் கருமேகத்தைப்போன்ற நிறம்கொண்டவர், அழகிய, செந்தாமரைபோன்ற திருக்கண்களைக்கொண்டவர், அத்தகைய பெருமானை எண்ணி என் மகள் உருகுகிறாள், தேன் சிந்தும் மலர்களைச் சூடிய, வாசனை நிறைந்த கூந்தலையுடைய இவள், அவரை நினைத்து உடல் மெலிந்தாள், அதனால், அவள் கையிலிருந்த சங்கு வளையல்கள் கழன்றன.

***

பாடல் - 2

சங்கு, வில், வாள், தண்டு, சக்கரக் கையற்கு,
செங்கனி வாய், செய்ய தாமரைக் கண்ணற்கு,
கொங்கு அலர் தண் அம் துழாய்முடியானுக்கு என்
மங்கை இழந்தது மாமை நிறமே.

சங்கு, வில், வாள், தண்டு, சக்கரம் ஆகிய ஆயுதங்களைக் கையில் ஏந்தியவர், கோவைக்கனிபோன்ற திருவாய், சிவந்த தாமரைபோன்ற திருக்கண்களைக்கொண்டவர், தேன் சிந்தும் மலர்களைக்கொண்ட, குளிர்ந்த, அழகிய துழாய்மாலையைச் சூடிய திருமுடியைக்கொண்டவர், அத்தகைய பெருமானை எண்ணி என் மகள் தன்னுடைய மாந்தளிர் நிறத்தை இழந்துவிட்டாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com