ஆறாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

காண்பவர்களுடைய கண்களை
ஆறாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

பாடல் - 5

பண்புஉடை வேதம் பயந்த பரனுக்கு,
மண்புரை வையம் இடந்த வராகற்கு,
தெள் புனல் பள்ளி எம் தேவபிரானுக்கு என்
கண்புனை கோதை இழந்தது கற்பே.

இறைவனின் தன்மைகளைச் சொல்லும் பண்பைக்கொண்ட வேதத்தை உபதேசித்த பெருமான், மண்ணுலகை(பூமியை) இடந்து மேலே கொண்டுவந்த வராகப்பெருமான், தெளிந்த நீரிலே பள்ளிகொள்ளும் எங்கள் தேவபிரான், அத்தகைய பெருமானை எண்ணி, காண்பவர்களுடைய கண்களைக் கவரவல்ல கூந்தலையுடைய என் மகள் தன்னுடைய கல்வியை இழந்துவிட்டாள்.

***

பாடல் - 6

கற்பகக் கா அன நல்பல தோளாற்கு,
பொன்சுடர் குன்று அன்ன பூந்தண் முடியற்கு,
நல்பல தாமரை நாள்மலர்க் கையற்கு என்
வில் புருவக்கொடி தோற்றது மெய்யே.

கற்பகச்சோலையைப்போன்ற நல்ல பல தோள்களைக்கொண்டவர், சுடர்வீசும் பொன்மலையைப்போன்ற அழகிய, குளிர்ச்சியான திருமுடியைக்கொண்டவர், அன்று பூத்த தாமரைமலர்களைப்போன்ற நல்ல பல திருக்கைகளைக் கொண்டவர், அத்தகைய பெருமானை எண்ணி, வில்போன்ற புருவத்தைக்கொண்ட கொடி போன்ற என் மகள் தன் உடலை இழந்துவிட்டாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com