ஐந்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

அடிமையாக்கிக்கொண்டாய்
ஐந்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

பாடல் - 3

கருளப் புள் கொடி, சக்கரப்படை வான நாட, எம்
                                                               கார்முகில்வண்ணா,
பொருள் அல்லாத என்னைப் பொருள் ஆக்கி அடிமை
                                                               கொண்டாய்,
தெருள்கொள் நால் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர
                                                               மங்கல நகர்க்கு
அருள்செய் தங்கியிருந்தாய், அறியேன் ஒரு கைம்மாறே.

கருடக்கொடி, சக்ராயுதத்தை ஏந்திய வான நாடனே, எங்கள் கார்முகில்வண்ணனே, ஒரு பொருட்டாக மதிக்குமளவு தகுதியில்லாதவன் நான், ஆனாலும், நீ என்னை ஒரு பொருளாக எண்ணி அடிமையாக்கிக்கொண்டாய், நான்கு வேதங்களையும் நன்கு அறிந்து தெளிவுபெற்றவர்கள் பலர் வாழ்கிற ஶ்ரீவரமங்கைநகர் (நாங்குநேரி) என்னும் திருத்தலத்திற்கு அருள்செய்வதற்காக அங்கே எழுந்தருளியிருப்பவனே, நீ எங்களுக்குச் செய்கிறவற்றுக்கெல்லாம் நாங்கள் என்ன கைம்மாறு செய்வது! எங்களுக்குத் தெரியவில்லையே!

******

பாடல் - 4

மாறுசேர்படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று
                                                                         மாயப்போர் பண்ணி
நீறு செய்த எந்தாய், நிலம் கீண்ட அம்மானே,
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கலநகர்
ஏறி வீற்றிருந்தாய், உன்னை எங்கு எய்தக் கூவுவனே?

பாண்டவர்கள் ஐவருக்காக அன்று மாயப்போர் புரிந்தவனே, அவர்களுக்கு எதிரிகளாகப் படையோடு வந்த கௌரவர்கள் நூறு பேரும் மங்கும்படி செய்து விரோதிகளைப் பொடிப்பொடியாக்கியவனே, பூமியைப் பிரளயத்திலிருந்து கீண்டு எடுத்த அம்மானே, தெளிவான ஞானம் கொண்டவர்கள் நடத்தும் வேத வேள்விகள் இடைவிடாமல் தொடர்ந்து நடைபெறுகின்ற ஶ்ரீவரமங்கை (நாங்குநேரி) என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவனே, உன்னை நான் எப்படிப் பெறுவேன்? எங்கே வந்து அடைவதாக எண்ணிக் கூப்பிடுவேன்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com