ஐந்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

வானவர்களின் கொழுந்தே
ஐந்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

பாடல் - 7

வந்தருளி என் நெஞ்சு இடம்கொண்ட வானவர்
                                                            கொழுந்தே, உலகுக்கு ஓர்
முந்தைத் தாய், தந்தையே, முழு ஏழ் உலகும் உண்டாய்,
செந்தொழிலவர் வேதவேள்வி அறாச் சிரீவர மங்கலநகர்
அந்தம்இல் புகழாய், அடியேனை அகற்றேலே.

எனக்காக வந்தருளி என்னுடைய நெஞ்சைத் தனக்கு இடமாகக் கொண்ட பெருமானே, வானவர்களின் கொழுந்தே, உலகுக்கு ஒப்பற்ற, பழைமையான தாய், தந்தையே, ஏழு உலகங்களையும் முழுமையாக உண்டவனே, சிறந்த பணிகளைச் செய்கிறவர்கள் வேத வேள்விகளை ஓய்வின்றிச் செய்துகொண்டிருக்கிற ஶ்ரீவரமங்கை (நாங்குநேரி) என்னும் திருத்தலத்திலே எழுந்தருளியிருப்பவனே, எல்லையில்லாத புகழைக்கொண்டவனே, என்னை உன்னிடமிருந்து அகற்றிவிடாதே.


******

பாடல் - 8

அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை
                                                                                  நன்கு அறிந்தனன்,
அகற்றி என்னையும் நீ அரும்சேற்றில் வீழ்த்திகண்டாய்,
பகல் கதிர் மணிமாடம் நீடு சிரீவர மங்கைவாணனே,
                                                                                 என்றும்
புகற்கு அரிய எந்தாய், புள்ளின் வாய் பிளந்தானே.

மிகுந்த ஒளிவீசும் மணிகள் பதிக்கப்பட்ட, உயர்ந்த மாடங்களைக்கொண்ட ஶ்ரீவரமங்கை (நாங்குநேரி) என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவனே, என்றைக்கும் சொல்லில் விளக்கமுடியாத சிறப்புகளைக்கொண்ட எங்கள் தந்தையே, பகாசுரன் என்கிற பறவையின் வாயைப் பிளந்தவனே, உன்மேல் அன்பற்றவர்களை அகற்றுவதற்காக நீ மாயமான, வலிமையான ஐந்து புலன்களைப் படைத்திருக்கிறாய், இதனை நான் நன்கு அறிவேன், இப்போது, உன்னிடமிருந்து என்னை அகற்றி, மீளமுடியாத அந்தச் சேற்றில் என்னை வீழ்த்திவிடுவாயோ என்று நான் அஞ்சுகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com