ஐந்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 7,8

செங்கண்களைக்கொண்ட
ஐந்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 7,8

பாடல் - 7

அரி ஏறே, என் அம் பொன் சுடரே, செங்கண் கருமுகிலே,
எரி ஏய் பவளக்குன்றே, நால் தோள் எந்தாய், உனது அருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய், குடந்தைத்
                                                                                                         திருமாலே,
தரியேன் இனி, உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.

ஆண் சிங்கமே, என்னுடைய அழகிய பொன் சுடரே, செங்கண்களைக்கொண்ட கரிய மேகமே, நெருப்புப் பொருந்திய பவளக்குன்றே, நான்கு தோள்களையுடைய எங்கள் தந்தையே, உன்னுடைய அருள் என்றும் பிரியாதபடி என்னை அடிமையாக்கிக்கொண்டவனே, திருக்குடந்தையிலே கிடந்த திருக்கோலத்தில் அருள்புரிபவனே, இனியும் என்னால் (இந்த உலகத்துயரங்களைத்) தாங்க இயலாது, உன்னுடைய திருவடிகளைத் தந்து என்னுடைய பிறப்பை நீக்குவாய்.

******

பாடல் - 8

களைவாய் துன்பம், களையாது ஒழிவாய், களைகண்
                                                                                              மற்றுஇலேன்,
வளை வாய் நேமிப் படையாய், குடந்தைக் கிடந்தாய்,
                                                                                              மாமாயா,
தளரா உடலம் எனது ஆவி சரிந்துபோம்போது
இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.

வளைந்த வாயைக்கொண்ட சக்ராயுதத்தை ஏந்தியவனே, திருக்குடந்தையிலே கிடந்த திருக்கோலத்தில் அருள்புரிபவனே, பெரிய மாயச்செயல்களைச் செய்பவனே, நீ என்னுடைய துன்பங்களைக் களைந்தாலும் சரி, களையாவிட்டாலும் சரி, உன்னையன்றி எனக்கு இன்னோர் ஆதரவு இல்லை, என்னுடைய உடல் தளர்ந்து, உயிர் சரிகிறபோதும், நான் தளராமல் உன்னுடைய திருவடிகளை ஒன்றாகப் பிடித்துக்கொண்டிருக்கவேண்டும், அதற்கு நீ சம்மதிக்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com