ஐந்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

தேன் பொருந்திய
ஐந்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

பாடல் - 1

மான் ஏய் நோக்குநல்லீர், வைகலும் வினையேன் மெலிய
வான் ஆர் வண்கமுகும் மது மல்லிகை கமழும்
தேன் ஆர் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடிகூடுவது என்றுகொலோ?

மான்போன்ற பார்வைகொண்ட பெண்களே, கொடிய வினைகளைச் செய்துவிட்ட நான் ஒவ்வொரு நாளும் மெலிந்துகொண்டிருக்கிறேன், வானத்தைத் தொடுகிற அழகிய பாக்குமரங்களும், தேன் பொருந்திய மல்லிகைகளும் கமழ்கிற தேன் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட திருவல்லவாழ் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனாகிய எம்பெருமானின் திருவடிகளை நான் எப்போது சேர்வேன்?

******

பாடல் - 2

என்றுகொல் தோழிமீர்காள், எம்மை நீர் நலிந்து என்
                                                                                              செய்தீரோ,
பொன் திகழ் புன்னை, மகிழ், புது மாதவிமீது அணவித்
தென்றல் மணம் கமழும் திருவல்லவாழ் நகருள்
நின்றபிரான் அடி நீறு அடியோம் கொண்டு சூடுவதே.

தோழிகளே, என்னை வருந்தச்செய்வதால் உங்களுக்கு என்ன பயன்? பொன்போன்ற மகரந்தங்களைக்கொண்ட புன்னை மரத்தின்மீதும், மகிழமரங்களின்மீதும், புதிய மாதவிக்கொடியின்மீதும் தென்றல் வீசுகிறது, அந்தத் தென்றலில் நறுமணம் கமழ்கிறது, அத்தகைய திருவல்லவாழ் நகரிலே நிற்கும் எம்பெருமானின் திருவடித் துகள்களை நான் என் தலையில் சூடிக்கொள்வது எப்போது?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com