ஐந்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

ஒலி கடலலைபோல்
ஐந்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

பாடல் - 3

சூடு மலர்க் குழலீர், துயராட்டியேனை மெலியப்
பாடு நல் வேத ஒலி பரவைத் திரைபோல் முழங்க
மாடு உயர்ந்து ஓமப்புகை கமழும் தண் திருவல்லவாழ்
நீடு உறைகின்ற பிரான் கழல் காண்டும்கொல் நிச்சலுமே.

மலர்களைச் சூடிய கூந்தலைக்கொண்ட தோழிகளே, எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் குளிர்ந்த திருவல்லவாழ் என்னும் திருத்தலத்திலே நல்ல வேத ஒலி கடலலைபோல் முழங்குகிறது, ஓமப்புகை பக்கங்களில் எழுந்து உயர்ந்து கமழ்கிறது, இதனால், துயரத்தில் இருக்கும் நான் மெலிந்து வாடுகிறேன், அப்பெருமானின் திருவடிகளை நாம் எப்போதும் காண்போமா?

******

பாடல் - 4

நிச்சலும் தோழிமீர்காள், எம்மை நீர் நலிந்து என்செய்தீரோ,
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சு அணி மாடங்கள்மீது அணவும் தண் திருவல்லவாழ்
நச்சு அரவின் அணைமேல் நம்பிரானது நல் நலமே.

தோழிகளே, எப்போதும் என்னை வருந்தச்செய்வதால் உங்களுக்கு என்ன பலன்? பசுமையான இலைகளைக்கொண்ட நீண்ட பாக்குமரமும் பலாவும் தென்னைமரமும் வாழைகளும் உயரமாக வளர்ந்து, மச்சினைக்கொண்ட மாடங்கள்மேல் தழுவியிருக்கிற குளிர்ந்த திருவல்லவாழ் என்னும் திருத்தலத்திலே, நஞ்சைக்கொண்ட பாம்பைப் படுக்கையாகக் கொண்ட எம்பெருமான் எழுந்தருளியிருக்கிறான், என்னுடைய நல்ல நலம் அவனிடம் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com