ஐந்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

தங்கியிருக்கிறவன் எம்பெருமான்
ஐந்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

பாடல் - 7

பாதங்கள் மேல் அணி பூந்தொழக் கூடும்கொல்,
                                                     பாவைநல்லீர்,
ஓத நெடும் தடத்துள் உயர் தாமரை, செங்கழுநீர்
மாதர்கள் வாள்முகமும் கண்ணும் ஏந்தும்
                                                   திருவல்லவாழ்
நாதன், இஞ்ஞாலம் உண்ட நம்பிரான்தன்னை
                                                  நாள்தொறுமே
.

பாவைபோன்ற பெண்களே, திருவல்லவாழ் என்னும் திருத்தலத்தில் தண்ணீர் நிறைந்த பெரிய குளத்திலே, உயர்ந்த தாமரையும் செங்கழுநீரும் பெண்களின் ஒளிபொருந்திய முகம், கண்ணைப்போல் தோன்றுகின்றன, அத்தகைய திருவல்லவாழ் நகரில் எழுந்தருளியிருக்கும் நாதன், இந்த உலகை உண்ட நம்பிரான், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவனுடைய திருவடிகளைத் தினந்தோறும் தொழும் பாக்கியம் நமக்குக் கிடைக்குமா?

******

பாடல் - 8

நாள்தொறும் வீடு இன்றியே தொழக்கூடும்கொல்,
                                                                                         நல்நுதலீர்,
ஆடுறு தீங்கரும்பும் விளை செந்நெலும் ஆகி எங்கும்
மாடுறு பூந்தடம் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ்
நீடு உறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள்கழலே.

நல்ல நெற்றியைக்கொண்ட பெண்களே, திருவல்லவாழ் என்னும் திருத்தலத்திலே, ஆலையில் இட்டு ஆட்டப்படுகின்ற இனிய கரும்பும், விளைந்த செந்நெல்லும் எல்லாப் பக்கங்களிலும் நிறைந்திருக்கின்றன, பக்கங்களில் அழகிய குளங்கள் அமைந்திருக்கின்றன, அவ்வாறு வயல்களால் சூழப்பட்ட, குளிர்ந்த திருவல்லவாழ் நகரில் என்றென்றும் தங்கியிருக்கிறவன் எம்பெருமான், தாவி நிலத்தை அளந்த அவனுடைய திருவடிகளை நாள்தோறும் தடங்கலில்லாமல் தொழும் பாக்கியம் நமக்குக் கிடைக்குமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com