ஐந்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

சக்ராயுதத்தை ஏந்தியவன்
ஐந்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 9, 10


பாடல் - 9

கழல்வளை பூரிப்ப நாம் கண்டு கைதொழக்கூடும்கொலோ, 
குழல் என யாழும் என்னக் குளிர்சோலையுள் தேன் அருந்தி
மழலை வரிவண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கரப்பெருமானது தொல் அருளே. 

குளிர்ந்த சோலையிலே தேன் அருந்திய இளமையான, வரிகளைக்கொண்ட வண்டுகள் குழலைப்போலவும் யாழைப்போலவும் இசைபாடுகின்றன. அத்தகைய திருவல்லவாழ் என்னும் திருத்தலத்திலே எழுந்தருளியிருப்பவன் எம்பெருமான், சுழன்று பகைவர்களை விரைவாக அழிக்கும் சக்ராயுதத்தை ஏந்தியவன், அத்தகைய பெருமானின் பழைமையான அருளாலே, அவனை நாம் விரைவாகத் தரிசிப்போமா? இப்போது அவனைப் பிரிந்திருப்பதால் நம் கையிலிருந்து கழன்றுபோகும் வளையல்கள் அவ்வாறு கழலாதபடி அவனைக் கைகூப்பித் தொழுவோமா?

***
பாடல் - 10

தொல் அருள் நல் வினையால் சொலக்கூடும்கொல், தோழிமீர்காள்,
தொல் அருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம்,
நல் அருள் ஆயிரவர் நலன் ஏந்தும் திருவல்லவாழ்
நல் அருள் நம்பெருமான் நாராயணன் நாமங்களே.

தோழிகளே, திருவல்லவாழ் என்னும் திருநகரத்தின் பழைமையான அருளைப் பூமியில் உள்ளோரும் வானவரும் தொழுகிறார்கள், நல்ல கருணை நிறைந்த ஆயிரம் வைணவர்கள் இந்தத் திருத்தலத்தில் சிறப்பாக வாழ்ந்து எம்பெருமானை வழிபடுகிறார்கள், அவர்களுக்கெல்லாம் நல்ல அருளைப் பொழிகிறான் நம்பெருமான், நாராயணன், அத்தகைய பெருமானின் பழைமையான அருளாலே நாம் சில நல்வினைகளைச் செய்தோம், அந்த நல்வினைகளின் பலனாக, அவனுடைய திருநாமங்களைச் சொல்லும் பாக்கியம் நமக்குக் கிடைக்குமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com