ஐந்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

இதயத்துக்குள் நுழைகிறாய்
ஐந்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

பாடல் - 1

பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய பாரதம்
                                                              கைசெய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டியிட்டுச் செய்துபோன மாயங்களும்
நிறந்தன் ஊடுபுக்கு எனது ஆவியை நின்று நின்று
                                                            உருக்கி உண்கின்ற இச்
சிறந்த வான்சுடரே, உன்னை என்றுகொல் சேர்வதுவே.

எம்பெருமானே, பெருந்தெய்வமான நீ பக்தர்களுக்காக இங்கே வந்து பிறந்த தன்மையை, வளர்ந்த தன்மையை, பெரிய மகாபாரதத்தை நிகழ்த்திப் பாண்டவர்களாகிய ஐவருக்குப் பல திறமைகளைக் காட்டி, மாயங்கள் செய்ததையெல்லாம் எண்ணும்போது, நீ என் இதயத்துக்குள் நுழைகிறாய், என்னுடைய ஆவியை நின்று உருக்கி உண்கின்றாய், அத்தகைய சிறந்த வான் சுடரே, நான் உன்னை என்று சேர்வேன்?

***

பாடல் - 2

வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும், மாய
                                             மாவினை வாய்பிளந்ததும்
மதுவை வார்குழலார் குரவை பிணைந்த குழகும்
அது, இது, உது என்னலாவன அல்ல என்னை உன்
                                             செய்கை, நைவிக்கும்,
முது வைய முதல்வா, உன்னை என்று தலைப்பெய்வனே?

நப்பின்னையைத் திருமணம் செய்துகொள்வதற்காக, காளைகளின்மீது பாய்ந்து அவற்றை வீழ்த்தினாய், மாயமாகக் குதிரை வடிவத்தில் வந்த கேசியின் வாயைப் பிளந்தாய், தேன் சிந்தும் கூந்தலைக்கொண்ட பெண்களோடு சிறப்பாகக் குரவைக்கூத்து ஆடினாய், உன்னுடைய செய்கைகளை அது, இது, உது என்று பிரித்துச்சொல்ல இயலுமா? (இயலாது!) அவற்றை எண்ணினால் என் மனம் நைந்துபோகிறது, பழைமையான உலகத்தின் முதல்வனே, நான் உன்னை என்றைக்கு வந்தடைவேன்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com