ஆறாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 1, 2

கையில் சக்ராயுதம்
ஆறாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 1, 2

பாடல் - 1

வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகு இனங்காள்,
செய்கொள் செந்நெல் உயர் திருவண்வண்டூர் உறையும்
கைகொள் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.

(இறைவன்மீது காதல்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) தினந்தோறும் அழகிய உப்பங்கழிகளில் வந்து மேய்கிற குருகுகளே, வயல்களிலே செந்நெல் உயர்ந்து வளர்கிற திருவண்வண்டூரிலே எம்பெருமான் எழுந்தருளியிருக்கிறான், கையில் சக்ராயுதம் ஏந்திய அந்தக் கனிவாய்ப் பெருமானைக் காணுங்கள், கை கூப்புங்கள், பெரிய தீவினைகளைச் செய்தவளான என்னுடைய காதலை அவனுக்குச் சொல்லுங்கள்.

******

பாடல் - 2

காதல் மென்பெடையோடு உடன்மேயும் கருநாராய்,
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர்
நாதன், ஞாலம்எல்லாம் உண்ட நம்பெருமானைக் கண்டு
பாதம் கை தொழுது பணிவீர் அடியேன் திறமே.

(இறைவன்மீது காதல்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) தன் துணையாகிய காதல் பேடையோடு சேர்ந்து மேய்கிற அழகிய நாரையே, வேத வேள்வி ஒலி எங்கும் கேட்கிற, குளிர்ந்த திருவண்வண்டூரின் தலைவன், அனைத்து உலகங்களையும் உண்ட நம்பெருமானைக் காணுங்கள், அவனது பாதத்தைத் தொழுங்கள், என்னுடைய நிலைமையை அவனுக்குச் சொல்லுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com