ஆறாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 3, 4

உடல் நொந்து
ஆறாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 3, 4

பாடல் - 3

திறங்கள் ஆகி எங்கும் செய்கள் ஊடு உழல் புள் இனங்காள்,
சிறந்த செல்வம் மல்கு திருவண்வண்டூர் உறையும்
கறங்கு சக்கரக் கைக் கனிவாய்ப் பெருமானைக் கண்டு
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே.

(இறைவன்மீது காதல்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) கூட்டமாக வயல்கள்மத்தியில் பறக்கிற பறவைகளே, சிறந்த செல்வம் நிறைந்த திருவண்வண்டூரிலே எழுந்தருளியிருக்கும் இறைவன், சுழன்றுவரும் சக்ராயுதத்தைக் கையில் ஏந்திய கனிவாய்ப் பெருமானைக் காணுங்கள், தரையில் இறங்கி அவனை வணங்குங்கள், என்னுடைய துன்பத்தை அவனுக்குச் சொல்லுங்கள்.

******

பாடல் - 4

இடர் இல் போகம் மூழ்கி இணைந்து ஆடும் மட
                                                                                            அன்னங்காள்,
விடல் இல் வேத ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர்
கடலின் மேனிப்பிரான் கண்ணனை, நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே.

(இறைவன்மீது காதல்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) பிரியாத போகத்திலே மூழ்கி இணைந்து ஆடுகின்ற இள அன்னங்களே, வேத ஒலி விடாமல் ஒலிக்கிற, குளிர்ந்த திருவண்வண்டூரிலே, கடலின் நிறம்கொண்ட பெருமான், கண்ணன், நெடுமால் எழுந்தருளியிருக்கிறான், அவனைக் காணுங்கள், இங்கே ஒருத்தி அவனையெண்ணி உடல் நொந்து உருகுகிறாள் என்று உணர்த்துங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com