ஆறாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 5, 6

பிரியாமல் சேர்ந்தே
ஆறாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 5, 6

பாடல் - 5

உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மட அன்னங்காள்,
திணர்த்த வண்டல்கள்மேல் சங்கு சேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந்தண் துழாய்முடி நம்பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே.

(இறைவன்மீது காதல்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) ஊடல்கொள்ளுதல், ஊடலைத்தீர்த்தல் ஆகியவற்றை உணர்ந்து, பிரியாமல் சேர்ந்தே மேய்கிற இளம் அன்னங்களே, கனமான வண்டல்மண்ணின்மேலே சங்குகள் சேர்கிற திருவண்வண்டூரிலே, பூக்கள் நிறைந்த, குளிர்ந்த துளசிமாலையை முடியில் சூடிய நம்பெருமானைக் காணுங்கள், கை கூப்புங்கள், எனக்காகவும் அவனைப் போற்றுங்கள்.

******

பாடல் - 6

போற்றி யான் இரந்தேன், புன்னைமேல் உறை
                                                                                      பூங்குயில்காள்,
சேற்றில் வாளை துள்ளும் திருவண்வண்டூர் உறையும்
ஆற்றல் ஆழி அம்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம்கொண்டு அருளீர் மையல்தீர்வது ஒரு வண்ணமே.

(இறைவன்மீது காதல்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) புன்னைமரத்தின்மேல் தங்கியிருக்கும் பூங்குயில்களே, உங்களை வாழ்த்திக் கெஞ்சுகிறேன், சேற்றிலே வாளை துள்ளுகிற திருவண்வண்டூரிலே எழுந்தருளியிருக்கும் பெருமான், ஆற்றல் நிறைந்த சக்ராயுதத்தை அழகிய கையில் ஏந்திய அமரர் தலைவன், அவனைக் காணுங்கள், என்னுடைய மயக்கம் தீர்வதற்கான ஒரு வழியைக் கேட்டுவாருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com