ஆறாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 7, 8

ஒரு வார்த்தை சொல்
ஆறாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 7, 8

பாடல் - 7

ஒருவண்ணம் சென்றுபுக்கு எனக்கு ஒன்று உரை
                                                                       ஒண்கிளியே,
செரு ஒண் பூம்பொழில்சூழ் செக்கர் வேலைத்
                                                                       திருவண்வண்டூர்
கருவண்ணம், செய்யவாய், செய்யகண், செய்யகை,
                                                                       செய்யகால்,
செரு ஒண் சக்கரம், சங்கு அடையாளம் திருந்தக்கண்டே.

(இறைவன்மீது காதல்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) அழகிய கிளியே, பலவிதமான, ஒளிவீசும் மலர்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட, செவ்வண்ணம் நிறைந்த கடலைக்கொண்ட திருத்தலம் திருவண்வண்டூர், அங்கே சென்று நீ எம்பெருமானைக் காணவேண்டும், கரியமேனி, சிவந்த வாய், சிவந்த கண், சிவந்த கை, சிவந்த திருவடிகள், போர் செய்யும் ஒளிநிறைந்த சக்ராயுதம், சங்கு ஆகிய அவருடைய அடையாளங்களைச் சரியாகக் கண்டு உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும், பின்னர், அவரிடம் எனக்காக ஒரு வார்த்தை கேட்டுவரவேண்டும்.

******

பாடல் - 8

திருந்தக்கண்டு எனக்கு ஒன்று உரையாய், ஒண் சிறுபூவாய்,
செருந்தி, ஞாழல், மகிழ், புன்னை சூழ் தண்
                                                                                           திருவண்வண்டூர்
பெரும்தண் தாமரைக்கண், பெரு நீள்முடி, நால் தடம்தோள்,
கரும்திண் மாமுகில்போல் திருமேனி அடிகளையே.

(இறைவன்மீது காதல்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) அழகிய, சிறிய, நாகணவாய்ப்பறவையே, செருந்தி, ஞாழல், மகிழம், புன்னை மரங்கள் சூழ்ந்த, குளிர்ந்த திருவண்வண்டூரிலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைப் பார்த்துவா, பெரிய, குளிர்ந்த தாமரைபோன்ற கண்கள், பெரிய, நீண்ட திருமுடி, நான்கு பெரிய திருத்தோள்கள், கருமையான, வலிமையான, பெரிய மேகத்தைப்போன்ற திருமேனிகொண்ட அவரை நன்றாகப் பார், திரும்பிவந்து அவரைப்பற்றி எனக்கு ஒரு வார்த்தை சொல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com