ஐந்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 3, 4

துன்பத்தைத் தீர்ப்பவர்கள் யார்?
ஐந்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 3, 4

பாடல் - 3

நீயும் பாங்கு அல்லை காண் நெஞ்சமே, நீள் இரவும்
ஓயும் பொழுது இன்றி ஊழியாய் நீண்டதால்,
காயும் கடும்சிலை என் காகுத்தன் வாரானால்,
மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே.

(இறைவன்மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) நெஞ்சமே, நீயும் எனக்கு ஆதரவாக இல்லை, இந்த நீண்ட இரவும் ஓய்வதாகத் தெரியவில்லை, ஊழிக்காலம்போல் அது நீண்டுகொண்டே செல்கிறது, பகைவர்களை வருத்துகிற கடுமையான வில்லைக் கையில் ஏந்திய என் காகுத்தனும் வரவில்லை, வலிய வினைகளைச் செய்தவளான நான் என்ன செய்வேன்? இந்தப் பூமியில் பெண்ணாகப் பிறந்துவிட்டேன், இறக்கும் வழியும் தெரியவில்லை.

******

பாடல் - 4

பெண் பிறந்தார் எய்தும் பெரும்துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாராது ஒளித்தான், இம் மண் அளந்த,
கண் பெரிய, செவ்வாய் நம் கார் ஏறு வாரானால்,
என் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?

(இறைவன் மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) (இந்த நீண்ட இரவு இன்னும் விடியவில்லையே, ஏன்?) ஒருவேளை, பெண்ணாகப் பிறந்தவர்கள் (தன் காதலனைப் பிரிந்து) அடைகிற பெரிய துயரத்தை நான் பார்க்கமாட்டேன் என்று ஒளி நிறைந்த சூரியன் வராமல் ஒளிந்துகொண்டானோ? மண்ணை அளந்த, பெரிய கண்களை உடைய, சிவந்த வாயைக்கொண்ட, மேகம் போன்ற நம் காளை, எம்பெருமானும் இன்னும் வரவில்லை, என்னுடைய மனத்தின் பெரிய துன்பத்தைத் தீர்ப்பவர்கள் யார்? என்னை ஆதரிப்பவர்கள் யார்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com