ஐந்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 9, 10

உலகத்தை அளந்த
ஐந்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 9, 10


பாடல் - 9

வெம்சுடரில் தான் அடுமால் வீங்கு இருளின் நுண்துளியாய்
அம்சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்,
செம்சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்,
நெஞ்சு இடர் தீர்ப்பார் இனி யார்? நின்று உருகுகின்றேனே.

(இறைவன் மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்)  இரவு நீண்டுகொண்டே செல்கிறது, பனியின் நுட்பமான துளிகள் என்மீது வீசுகின்றன, கொடிய நெருப்பைப்போல் என்னைத் துன்புறுத்துகின்றன, அழகிய சுடரைக்கொண்ட சூரியனின் அழகிய, பெரிய தேர் இன்னும் தோன்றவில்லை, சிவந்த, ஒளிநிறைந்த தாமரை போன்ற கண்களைக்கொண்ட செல்வன், எம்பெருமானும் வரவில்லை, ஆகவே, நான் இங்கே நின்று உருகிக்கொண்டிருக்கிறேன். இனி, என் நெஞ்சின் துயரத்தைத் தீர்ப்பவர்கள் யார்?

******

பாடல் - 10

நின்று உருகுகின்றேனேபோல நெடுவானம்
சென்று உருகி நுண்துளியாய்ச் செல்கின்ற கங்குல்வாய்
அன்று ஒருகால் வையம் அளந்தபிரான் வாரான் என்று
ஒன்று ஒருகால் சொல்லாது உலகோ உறங்குமே.

(இறைவன் மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) இங்கே நின்று உருகிக்கொண்டிருக்கிற என்னைப்போலவே, இந்த நீண்ட வானமும் இரவுப்பொழுதில் உருகுகிறது, நுட்பமான பனித்துளிகளைப் பெய்கிறது, முன்பு ஒருநாள் வாமன அவதாரத்தின்போது தன் திருவடியால் இந்த உலகத்தை அளந்த எம்பெருமான் இன்னும் வரவில்லை, அவன் வரமாட்டான் என்றேனும் யாராவது என்னிடம் சொல்லலாமே, இப்படி எதுவும் சொல்லாமல் இந்த உலகம் உறங்குகிறதே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com