ஐந்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

விலகுவதே இல்லை
ஐந்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

பாடல் - 3

நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும்
                                                                                          முனிதிர்,
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே.

(இறைவன்மீது அன்புகொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) தாய்மார்களே, நீங்கள் என்மீது கோபப்படுகிறீர்கள், ‘இவள் இங்கே செயலற்று நிற்கிறாள், திகைக்கிறாள், நோகிறாள்’ என்று சினம்கொள்கிறீர்கள், நான் என்ன செய்வேன்? மலைபோல் மாடங்கள் உயர்ந்துநிற்கிற திருக்குறுங்குடியில் எழுந்தருளியிருக்கும் நம்பியை நான் கண்டபிறகு, அவருடைய வெற்றி கொண்ட வில்லும், தண்டும், வாளும், சக்ராயுதமும், சங்கும்தான் எங்கும் தோன்றுகின்றன, என் கண்ணைவிட்டும் நெஞ்சைவிட்டும் அவை விலகுவதே இல்லை.

*******

பாடல் - 4

நீங்கநில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்,
தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான்
                                                                                                         கண்டபின்
பூந்தண் மாலைத் தண்துழாயும் பொன்முடியும் வடிவும்
பாங்குதோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவ்வே.

(இறைவன்மீது அன்புகொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) தாய்மார்களே, என்னுடைய கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டே இருக்கிறது என்று நீங்கள் கோபப்படுகிறீர்கள், நான் என்ன செய்வேன்? தேன் நிறைந்த சோலைகளைக்கொண்ட திருக்குறுங்குடியில் எழுந்தருளியிருக்கும் நம்பியை நான் கண்டபிறகு, பூக்கள் நிறைந்த, குளிர்ச்சியான மாலையும், குளிர்ந்த துளசியும் பொன்முடியும் திருமேனி அழகும், பாங்காகத் தோன்றும் பட்டும் அரைநாணும்தான் பாவியாகிய என் பக்கத்தே இருக்கின்றன, (வேறெதும் எனக்குத் தெரிவதில்லை.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com