ஐந்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

கொடிய நெருப்பு
ஐந்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

பாடல் - 3

காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும்,
காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும்,
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்,
காண்கின்ற இக்காற்று எல்லாம் யானே என்னும்,
காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும்,
காண்கின்ற கடல்வண்ணன் ஏறக்கொல்லோ?
காண்கின்ற உலகத்தீர்க்கு என்சொல்லுகேன்?
காண்கின்ற என் காரிகை செய்கின்றவே.

(தாய் சொல்கிறார்) என் மகள், 'கண்ணில் தோன்றுகிற பூமி முழுவதும் நானே' என்கிறாள், அதேபோல், 'வானம் முழுவதும் நானே' என்கிறாள், 'கொடிய நெருப்பு முழுவதும் நானே' என்கிறாள், 'இந்தக் காற்று முழுவதும் நானே' என்கிறாள், 'கடல் முழுவதும் நானே' என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், காட்சிக்கு ஏற்ற கடல்போன்ற வண்ணத்தைக்கொண்டவனான திருமாலின் ஆவேசம் இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது, இந்த உலகத்தைமட்டுமே காண்கிறவர்கள் நீங்கள், பெருமானின் காட்சியைக் காண்கின்ற என் மகள் செய்கிறவற்றை உங்களிடம் நான் எப்படிச் சொல்வேன்?

******

பாடல் - 4

செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்,
செய்வான் நின்றனகளும் யானே என்னும்,
செய்து முன் இறந்தவும் யானே என்னும்,
செய்கைப்பயன் உண்பேனும் யானே என்னும்,
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்,
செய்ய கமலக்கண்ணன் ஏறக்கொலோ?
செய்ய உலகத்தீர்க்கு இவை என்சொல்லுகேன்?
செய்ய கனிவாய் இளமான் திறத்தே.

(தாய் சொல்கிறார்) என் மகள், 'செய்துகொண்டிருக்கிற வேலைகள் அனைத்தும் நானே' என்கிறாள், 'இனி செய்யவேண்டிய வேலைகளும் நானே' என்கிறாள், 'முன்பு செய்த வேலைகளும் நானே' என்கிறாள், 'அந்தச் செய்கைகளின் பலன்களை அனுபவிப்பதும் நானே' என்கிறாள், 'இந்தச் செயல்களைச் செய்கிறவர்களைப் படைப்பதும் நானே' என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், சிவந்த தாமரைபோன்ற கண்களைக்கொண்ட திருமாலின் ஆவேசம் இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது,  கபடம் அறியாத உலகத்து மக்களே, சிவந்த கனிபோன்ற வாயைக்கொண்ட என்னுடைய மகள், இந்த இளமானின் தன்மையை நான் உங்களுக்கு எப்படிச் சொல்வேன்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com